வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை இரவில் படமாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதனிடையே பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த விஜய் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் வெங்கட் பிரபு, ரசிகர்களில் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளிப்பது உண்டு. அந்த வகையில் விஜய் ரசிகர் ஒருவர், கடந்த வாரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கேட்டு பதிவிட்டிருந்தார். அதற்கு விரைவில் என பதிலளித்திருந்தார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் மீண்டும் விஜய் ரசிகர் ஒருவர், அதை மேற்கோள்காட்டி, “விரைவில்-னும் சொல்லி ஒரு வாரம் ஆகுது” என குறிப்பிட்டு அப்டேட் கேட்டு பதிவிட்ட அவர், தவறான வார்த்தையையும் கோபமாக பயன்படுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “சொல்லணும்னு நெனச்சேன்! இப்போ இதுக்கு மேல எப்படினு நீங்களேசொல்லுங்க” என அப்செட்டுடன் பதிவிட்டுள்ளார்.