வெங்கட் பிரபு கடைசியாக விஜய்யை வைத்து ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. பின்பு சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவுள்ளதாக தகவல் வெளியானது. சிவகார்த்திகேயனும் வெங்கட் பிரபும் ஏற்கனவே ஒரு படம் பண்ண கமிட்டாகி அது தள்ளி போய்கொண்டே போன சூழ்நிலையில் அப்படத்தை மீண்டும் இருவரும் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இருவரும் இணையும் படம் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் சைன்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது போக படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் இது தொடர்பாக அனிருத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக வெங்கட் பிரபு தன் படங்களுக்கு தனது குடும்ப உறவினரான யுவன் சங்கர் ராஜாவையே தான் இசையமைப்பாளராக புக் செய்வார். இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வந்தார். ‘மன்மத லீலை’ படத்திற்கு மட்டும் பிரேம் இசையமைத்திருந்தார். இந்த சூழலில் புதிய முயற்சியாக அவர் அனிருத் பக்கம் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் மதராஸி படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.