சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான படத்தின் மோஷன் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி வெளியானது. படத்தின் டீசர் வெளியானதுமே, பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய 'டெனெட்' படத்துடன் அதை ஒப்பிட ஆரம்பித்தனர். இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எங்கள் 'மாநாடு' படத்தின் டீசரை 'டெனெட்' படத்தோடு சிலர் ஒப்பிடுவது எனக்குக் கௌரவம்தான். துரதிர்ஷ்டவசமாக இதற்கும் 'டெனெட்' படத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் எனக்கு 'டெனெட்' படம் புரியவே இல்லை. ட்ரைலருக்குக் காத்திருங்கள். அப்போது வேறொரு படத்துடன் நீங்கள் ஒப்பிடலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.