கோலிவுட்டில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. ஆரம்பகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்பு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்தார். கடைசியாக சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இசையமைப்பாளராக வெங்கட் பிரபு - அஷோக் செல்வன் கூட்டனியில் வெளியான மன்மத லீலை படத்தில் பணியாற்றியிருந்தார். இப்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 45 வயதை எட்டியுள்ள பிரேம்ஜி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார். இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டன்று, இந்த வருடம் தான் திருமணம் செய்துகொள்வதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் மணப்பெண் குறித்து அவர் குறிப்பிடவில்லை. இதையடுத்து 22 வயதாகும் பாடகி வினைதாவைத்தான் பிரேம்ஜி திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, ஜூன் 9ஆம் தேதி பிரேம்ஜிக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் இது தொடர்பான பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் மணப்பெண் பெயர் இந்து எனக் குறிப்பிட்டிருந்தது. இருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருத்தனி முருகன் கோயிலில் திருமணம் நடக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரேம்ஜி திருமணம் குறித்து அவரது அண்ணன் வெங்கட் பிரபு தற்போது பகிர்ந்துள்ளார். அந்த குறிப்பில், “எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?, சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா? இதை எல்லாவற்றையும் விட, பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ? என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.
அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்! இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள்
மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோட் பட அப்டேட் விரைவில் வரும் என கூறியுள்ளார்.