vela ramamoorthy complained in regards sangam by saubmit his novel

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி வெளியான படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ந்தார்.

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு தெரிவித்திருந்தார். தனுஷும் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார். இப்படம் தற்போது உலக அளவில் ரூ.65 கோடியைக்கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தெலுங்கு பதிப்பு வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுவந்த சூழலில், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தான் எழுதிய ‘பட்டத்து யானை’ நாவலைத்திருடி, கேப்டன் மில்லர் படத்தை எடுத்துள்ளதாகச்சில தினங்களுக்கு முன்பு கூறினார். மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி தற்போது, தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் தனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் கொடுத்துள்ளார். மேலும் பட்டத்து யானை நாவலை சங்கத்தில் ஒப்படைத்துள்ளார்.