
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படம் ‘கஜானா’. இனிகோ பிரபாகர் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இப்படம் வரும் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் டி கிரியேஷன்ஸ் சார்பில் திருமலை படத்தை வெளியிடுகிறார். படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதிழயகண், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேதிகா பேசுகையில், “கஜானா படத்தின் ஒன்லைன் சொல்லும் போதே, எனக்கு இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியூவில் நான் இதை கேட்ட போது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். நான் இந்த படத்தில் ஒரு நடிகையாக பங்கேற்றாலும், ஒரு ரசிகையாக இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த படம் சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் சாரை பாராட்டுகிறேன், இப்படி ஒரு தைரியமான முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். தயாரிப்பாளரும் அவர் தான், இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது சாதாரண விசயம் இல்லை. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி” என்றார்.