மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்றவர் வேடன். சமீபகாலமாக ‘மீ டு’ சர்ச்சை, போதைப்பொருள் சர்ச்சை, அரசியல் கருத்து சர்ச்சை ஆகியவைகளால் பரபரப்பாக பேசப்பட்டார். குறிப்பாக அண்மைக்காலங்களில் வலது சாரி ஆதரவாளர்கள் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் வேடனுக்கு கேரளாவைத் தாண்டி தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் ஆதரவு குரல் வலுத்தது. இதன் மூலம் இன்னமும் பிரபலமடைந்தார் வேடன். மேலும் அவரது அடுத்த புராஜெக்டுகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. 

இந்த நிலையில் மலையாளத்தில் பாடலைத் தாண்டி நடிகராக நடித்து வரும் வேடன் தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா படத்தை மையப்படுத்தி புதிதாக உருவாகும் படத்தில் வேடன் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படத்தில் பரத், ஆரி அர்ஜுனன், சுனில் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளது. ரஃப் நோட் புரொடைக்‌ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. 

வேடன் இசையமைக்கவுள்ளதாகப் படக்குழு வெளியிட்ட வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வேடனின் முதல் தமிழ் படம் என்பதால் இப்படத்தின் இசைக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அது குறித்தான அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.