விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பிரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், உருவாகும் புதுப்படம் ‘பூக்கி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்க ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை குறிவைத்து உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக தனுஷா நடிக்க, இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் இதில் விஜய் ஆண்டனி உட்பட படக்குழுவினரும் இயக்குநர்கள் வசந்த பாலன், ரத்னகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் வ்சந்த பாலன் பேசுகையில், “சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியோடைய மாநாட்டை பார்த்தேன். அதை பார்த்த போது, இளைஞர்கள் அரசியல் படுத்தாமல் இருப்பதை பார்க்க முடிந்தது. அதோடு காலையில் இருந்து வெயிலில் கருகி சாவதையும் மேடையில் இருந்து தூக்கி வீசப்படுவதையும் பார்க்கும் நேர்ந்தது. இது எனக்கு ரொம்ப கவலையளித்தது. எதோ ஒரு விதத்தில் அந்த இளைஞர்களை நாம் அரசியல்படுத்த தவறிவிட்டோம். அவர்களின் குரலை சினிமாவில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டோம்.
அதனால் இளைஞர்களுடைய குரல், அவர்களுடைய மொழி, உலகம், உணர்வுகள், காதல், எந்த மாதிரி அவர்கள் சிந்திக்கிறார்கள் போன்றவற்றை சினிமாவில் பதிவு செய்ய வேண்டும். அது பதிவாகாமல் இருப்பதால் தான், அவர்களின் திசை மாறிவிட்டது. கன்னடம், மலையாள படங்களில் கூட இளைஞர்களின் குரலை தொடர்ச்சியாக பேசுகின்றனர். ஆனால் தமிழில் அப்படி இல்லை. இது வேதனை அளிக்கிறது. இந்த படம் இளைஞர்களின் உலகத்தை பேசும் என நம்புகிறேன்” என்றார்.