“ப்ளாக்மெயில் வார்த்தை 16 ஆம் நூற்றாண்டின்...” - சுவாரஸ்ய கதை சொன்ன வசந்த பாலன்

319

ஜே டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி, ஸ்ரீ காந்த் மற்றும் பிந்து மாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ப்ளாக்மெயில்’. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், “ப்ளாக்மெயில் என்ற வார்த்தை என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. இந்த வார்த்தை எப்படி வந்திருக்கும் எனத் தேடினேன். மெயில் என்றால் வாடகை, கட்டணம் என்ற அர்த்தத்தில் வரும். 16 ஆம் நூற்றாண்டின் வார்த்தை இது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையில் இல்லீகல் இமிக்ரண்ட்ஸ் இருந்த இடத்தில் தலைவர்கள், கொள்ளையர்கள் சென்று சூறையாடி இருக்கிறார்கள். அப்படி எங்களை கொள்ளையடிக்காதே, சூறையாடாதே என்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டணம்தான் மெயில். பிளாக்காக அதை கொடுத்ததால் பிளாக்மெயில் என்று பெயர் வந்தது. 

படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே விறுவிறுப்பாக இருந்தது. இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் ‘விக்ரம் வேதா’வுக்கு அருமையாக இசையமைத்திருந்தார். அந்தப் படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்க்க வைத்த பெருமை சாமுக்கும் உண்டு. 17 வயது பையனாக என் கண் முன்னே வந்து வளர்ந்தவர் ஜிவி பிரகாஷ். மகிழ்ச்சியாக உள்ளது. யாரையும் காயப்படுத்தாத குணம் கொண்டவர். அவரது குடும்ப விஷயத்தில் எந்தளவுக்கு பக்குவமாக நடந்தார் என்பது வியப்பாக இருந்தது. எனக்காக இரண்டு படங்கள் விட்டுக்கொடுத்தார். அவர் இல்லை என்றால் படம் வெளியாகி இருக்காது. படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார். 

GV prakash vasantha balan
இதையும் படியுங்கள்
Subscribe