/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/157_16.jpg)
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
மேலும் படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் ரஜினி, சிம்பு உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களைப் படக்குழுவிற்குத்தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குநர் வசந்த பாலன் 'லவ் டுடே' பட வெற்றியால் அவர் இயக்கி வரும் 'அநீதி' படத்திற்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இது தொடர்பாக வசந்த பாலன் வெளியிட்டுள்ள பதிவில், "கோவிட் தொற்றுக்குப் பிறகு பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கிறார்கள், பார்ப்பார்கள் என்கிற மாயை நிலவி வந்தது. மாயை அல்ல உண்மை என்ற நிலைமையிருந்தது.
சின்ன படங்களை மக்கள் ஓடிடி யில் பார்த்துக் கொள்வார்கள் என்று உறுதியாகச் சொல்கிற பெரும் திரளும் உரையாடலும் திரையுலகம் முழுக்க நிகழ்ந்த வண்ணம் இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம் பெரிய படங்களின் வெற்றியும் சிறிய படங்களின் சரிவும் அந்த கணக்கிற்கு ஏற்றவாறு நிகழ்ந்தது. போன ஆண்டு வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் வெற்றி ஓரளவிற்கு நம்பிக்கையைத் தந்தது. ஆனாலும் பெரிய படங்கள், பெரிய நடிகர்கள், நட்சத்திர பட்டாளம் என்பதே தொடர்ந்த தகவல்களாக அமைந்தது. நிலைமையை அனைவர் மனதிலும் நிறுவியது.
இந்த நிலையில் லவ் டுடே வின் வெற்றி புதுமுக நடிகரின் படமும் திரையரங்கில் பெரியதாக வெற்றி பெறும் என்கிற பெரும் நம்பிக்கையை பொதுவில் விதைத்துள்ளது. அநீதி திரைப்படத்திற்கான பெரும் நம்பிக்கையைத்தூவியுள்ளது. லவ் டுடே இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் அவர்களுக்கும் படக்குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" எனத்தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வசந்த பாலன் தற்போது அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிக்கும் 'அநீதி' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)