ADVERTISEMENT

இளம் கவிஞர்களுக்கு அழைப்புவிடுக்கும் வசந்த பாலன்!

04:45 PM Jun 08, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் தற்போது ரிலீசிற்குத் தயாராகவுள்ளது. இப்படத்தின் பணிகளை முடித்த கையோடு, நடிகர் அர்ஜுன்தாஸை வைத்து அடுத்த படத்தை இயக்கிவருகிறார் வசந்தபாலன். இப்படமானது வசந்தபாலனின் பள்ளிக்கால நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பின்கீழ் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதாநாயகி கதாபாத்திரமானது பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காதல் பாடலை முழுக்க முழுக்க நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளை வைத்து உருவாக்க இயக்குநர் வசந்த பாலன் முடிவெடுத்துள்ளார். இப்பாடல் உருவாக்கும் பணியையும் இளம் கவிஞர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "'ஜெயில்' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து திரை பிரவேசத்திற்குக் காத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் அர்ஜுன் தாஸ் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது ரசிகர்கள் அறிவீர்கள்.

இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தினுடைய கதைப்போக்கில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளன. இது எதேச்சையானதா அல்லது 25 ஆண்டு கால நா.முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா அல்லது இரண்டு பேரும் ஜூலை 12 என்ற ஒரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா அல்லது நான் சோர்வாய் வீட்டில் முடங்கிக்கிடந்த காலத்தில் உப்புக்கறியுடன் என்னை எழுப்பி என்னைப் பசியாற வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா என்று தெரியவில்லை.

இந்தக் கதையில் வரும் கதைநாயகி பண்பலை வானொலியில் ஒலிக்கும் திரைப் பாடல்களுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்துப் பாடுகிற ஒரு கதாபாத்திரம். நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகை. மூன்றாம் பிறையிரவில் கதாநாயகனுக்கு நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை கதாநாயகி விளக்க, அவனும் மெல்ல நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ஈர்க்கப்படுகிறான். ரசிக்கிறான். இருவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு பௌர்ணமி இரவில் முத்துக்குமாரின் ஒரு பாடல் வரியை கதாநாயகன் உச்சரிக்க, அடுத்த வரியைக் கதாநாயகி உச்சரிக்க, வரிகள் பாடலாகி, இசையாகி காதல் மலர்கிறது. இந்த தருணத்தில் ஒலிக்கும் ஒரு காதல் பாடலுக்குப் பாடல் வரிகள் தேவைப்பட்டது.

நண்பரும் கவிஞருமான கபிலனிடம் எதேச்சையாக இந்த மாதிரி காட்சியமைப்பு உள்ளது என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளையே உபயோகப்படுத்தலாமே என்று கபிலன் ஆலோசனை வழங்கினார். எனக்கும் அதுதான் மிக சரியாகப்பட்டது. ஆனால் நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதிலுள்ள ஒரு காதல் கவிதையைப் பாடலாக மாற்றவேண்டும் அல்லது சில காதல் கவிதைகளிலிருந்து முத்துமுத்தான காதல் ததும்பும் வரிகளைத் தேர்ந்தெடுத்து முழுப் பாடலாக மாற்ற வேண்டும். நோய்மையில் அது மூச்சு முட்டும் பணி.

இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது. கவிதை வரிகள் உரைநடை பாணியில் இருக்கும். இசை சந்தங்களுக்குப் பொருத்தமான வரிகள் இருந்தால்தான் இசையமைக்க இசைவாகவும் இருக்கும். அது வெற்றியும் பெறும். இந்த பெரும் பணியில் நா.முத்துக்குமாரின் நண்பனாக, ஒரு திரைப்பட இயக்குநராக நான் மட்டும் ஈடுபடுவதை விட, நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகர்கள் விரும்பினால் என்னுடன் கை கோர்க்கலாம். விரும்பினால் இளம் பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமாரின் கவிதையிலிருந்து சின்ன சின்ன மாற்றங்களுடன் சந்தத்திற்கு ஏற்ற ஒரு பாடலை எழுதி அனுப்பலாம்.

காட்சிக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கும் பாடலை நானும் இசையமைப்பாளரும் இணைந்து தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வோம். அப்படித் தேர்வாகும் பாடலை ஒருங்கிணைத்த அல்லது எழுதிய அந்த ரசிகருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நா.மு. கவிதையைத் தேர்ந்தெடுத்துத் தந்ததற்கு அல்லது சில கவிதைகளை வைத்துப் பாடலாகத் தொகுத்தமைக்கான அங்கீகாரமும், மரியாதையும், சன்மானமும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்து வழங்கப்படும். மேலும் நா.மு. கவிதைக்கான காப்புத்தொகை நா.முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்

தேர்ந்தெடுக்கப்பட்ட நா.மு.கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தினம்: 30 ஜூன் 2021, மின்னஞ்சல்: vb@urbanboyzstudios.com" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT