“நாளைக்கு நம் பெண்களுக்கு நடக்கும் போது அழுது கதறி ஒரு பயனும் இல்லை” - வசந்த பாலன்

10

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் ஜெயசுதா தம்பதிக்கு பிறந்தவர் ரிதன்யா(27). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான 78 நாட்களில் மணப்பெண் ரிதன்யா பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கு தனது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தான் காரணம் என இறப்பதற்கு முன்பு அவரது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்க வைத்தது. 

இதனிடையே, ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவிநாசியில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சேவூர் போலீசார், கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரையும் கைது செய்தனர். அதேசமயம் மாமியார் சித்ராதேவி மருத்துவச் சிகிச்சை பெற்றுவருவதால், நிபந்தனையின் பெயரில் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். வரதட்சனை கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வசந்தபாலன், ரிதன்யாவின் அழுகுரல் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது என தனது கருத்தை நீண்ட பதிவாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ரிதன்யாவின் அழுகுரல் இரவெல்லாம் ஒரு ஒப்பாரிப்பாடலாய் கேட்டுக் கொண்டேயிருந்தது. இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. பெண்ணை புரிந்தே கொள்ளாத நூற்றாண்டுகால ஆணாதிக்கம், எல்லோருடைய குடும்பங்களிலும் நீண்ட கால வடுவைப்போல, ஒரு மச்சம் போல ஒட்டிப் பிறக்கிறது. பெண் (ரிதன்யா) மீது செலுத்தப்படும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள், ஆணின் அளவுக்கதிகமான பாலியல் வெறியை, பாலியல் வறட்சியை பாலியலை ஒட்டி உருவாக்கப்பட்ட அதீத அழகியலை, பெருங்கனவை வெளிக்காட்டுகிறது. ரிதன்யா வழக்கை வரதட்சணைக் கொடுமை, தற்கொலை என்ற பார்வையில் சுருக்கி விடுதல் குறுகியப் பார்வை. 

ரிதன்யாவிற்கு உயர் கல்வி வரை கற்று தந்த கல்விக்கூடங்களும், கல்வி முறையும் திருமணமாகி  78 நாட்கள் கூட வாழ்க்கையை வாழ முடியாத, எதிர்கொள்ள முடியாத தரத்தில் தான் கல்வி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கூடங்கள் என்பதே உலகின் மினியேச்சர் தானே. பூமி வெடிப்பு உண்டானது முதல், மனிதன் உருவானது வரையான பரிணாம வளர்ச்சி பற்றி, மனிதக்குழுகள் தோற்றம் முதல் குடும்ப அமைப்புகள் உருவானது வரை என வரலாறு, சமூகம், மொழி, இலக்கியம், அறிவியல் என பலவேறு துறை சம்மந்தப்பட்ட பாடங்களைக் கற்று தந்து, வாழ்வைப் பற்றிய பயத்தைப் போக்கி வானில் தன்னந்தனியாக பறக்க கற்றுத் தருவதே கல்விக்கூடங்களின் முதலாய முக்கியப் பணி. ஆனால் யதார்த்தம் என்ன? தேர்வுக்கு மட்டுமே/ மதிப்பெண்களுக்கு மட்டுமே குழந்தைகள் என்ற பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றனர். பெண் பற்றிய புரிதலைச் சொல்லி தராத கல்வி, தேர்வுத் தோல்வியே தாங்க மனபலம் சொல்லித் தராத கல்வி, தேர்வை விட வாழ்க்கை அழகானது என்று சொல்லித் தராத கல்வி மற்றும் சமூகம் என இதன் தொடர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். கல்வி கற்ற மேம்பட்ட சமூகத்தின் ஆணிவேரில் நோய் கண்டுள்ளது. பணம் ஈட்ட நமக்கு கல்வியறிவு உள்ளது. அதற்கு நமக்கு பயிற்சியிருக்கிறது. 

கோடிகள் செலவழித்து திருமணம் நடத்த நமக்கு பலம் இருக்கிறது. ஆனால் பெண்ணை/மகளைப் புரிந்து கொள்ள நமக்கு படிப்பில்லை, அனுபவமில்லை... பக்குவமில்லை.. பொறுத்துப்போ என்று தொடர்ந்து குரல் கொடுக்கிற குடும்பமைப்புகளின் பலவீனங்களை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். முதலிரவில் பெண்ணைப் பலிக்கொடுக்கிற திருமணயமைப்பை நாம் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு திருமண வயதான ஆணும் பெண்ணும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் பெண்ணுடலைப் புரிந்து கொண்டவர்களா? பெண்ணின் மீது மரியாதை கொண்டவர்களா? என்பதற்கு பதில் இல்லை. இல்லையென்பது பெண் மீதான தொடர் பாலியல் குற்றங்களைக் காண்கையில் உறுதியாகிறது. பெண்ணை இன்னும் போகப்பொருளாக தின்பண்டமாக மாற்றி வைத்திருக்கிற கல்வி, கலை, திரைப்படம், சமூகம் என அனைத்தும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். பொது சமூகத்தில் பெரும் விவாதம் நடந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காணுதல் சாத்தியம்.
பெண்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு எல்லா தனியார், அரசு  துறைகளிலும், அரசியல் கட்சிகளிலும் உறுதிப்படுத்தப்படவேண்டும். 

சட்டமன்றங்களிலும் பாராளுமன்றங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் பெண்களின் பார்வை, பெண்ணின் குரல், பெண்ணின் துயரம் எட்டுதிக்கிலும் உரத்து  ஒலிக்கும். இது ஒருவரையொருவர்
கைகோர்த்து செய்யவேண்டிய கூட்டு நடவடிக்கை. மொத்த சமூக, கல்வி, அரசியல் மாற்றமே இது போன்ற தற்கொலைகளைத் தடுக்க இயலும். வெறுமனே விரைவு உணவு போல விரைவு நீதியாக இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை மட்டும் தண்டித்து விட்டு கடந்து போனால் மீண்டும் மீண்டும் பெண்கள் பாலியல் சூறையாடலுக்கு உள்ளாக நேரிடும். நாளைக்கு நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் போது மட்டும் 
அழுது கதறி ஒரு பயனும் விளையப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

marriage Tiruppur vasantha balan young girl
இதையும் படியுங்கள்
Subscribe