Skip to main content

வீரப்பன் பட ஆய்வுக்காக சென்றபோது கர்நாடகா மக்கள் பகிர்ந்த சம்பவம் - வசந்த் பாலகிருஷ்ணன்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Vasanth Balakrishnan | Koose Munisamy Veerappan | ZEE5

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. 

டாக்குமெண்டரி உருவாக்கத்திற்காக வீரப்பன் வாழ்ந்த காடுகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பல ஆய்வுகளைச் செய்தவரும், டாக்குமெண்டரி உருவாக்கத்தில் மூவரில் ஒருவராகப் பணியாற்றிய வசந்த் பாலகிருஷ்ணன் பேசியதாவது, “வீரப்பன் என்று யூடியூப்பில் தேடினால் இன்றும் 500 வீடியோ வரும். அவ்வளவு டாக்குமெண்டரி இருக்கு, படங்கள் வந்திருக்கு. அத்தனையையும் தாண்டி இந்த டாக்குமெண்டரி எதற்கு என்றால் வீரப்பனைப் பற்றி சொல்ல அத்தனை கதைகள் அதிலிருக்கிறது. வீரம், இரத்தம், துரோகம், வலிமை, கொடுமை, நகைச்சுவை வீரப்பனின் கதையில் இருக்கிறது. இதுவரை சொல்லப்பட்டது மிகக் குறைவே. அதைத் தாண்டி அவ்வளவு விசயங்கள் இருக்கிறது. நக்கீரன் 1993 மற்றும் 1996 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பேட்டிகள், படங்கள்தான் இதற்கெல்லாம் அடிப்படையாகும். இது பத்திரிகை துறையில் நடந்த பெரிய சாதனை.

“எங்களோட ஆசிரியர் நக்கீரன் கோபால் சொன்னாரு... எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க, இந்த படைப்பு முழுமையாக, நேர்மையாக வர வேண்டும். அப்படி செய்ய முடிஞ்சா செய்யுங்க என்றார். உலகின் எந்த ஹீரோவோடும், வில்லனோடும் பொருத்திப் பார்க்கக்கூடிய பண்பு நலன்கள் கொண்டவர் வீரப்பன். அதனாலேயே அவருடைய கேரக்டரை சொல்லணும்னு நினைத்தோம். வீரப்பன் வாழ்ந்த காலத்திலிருந்த மக்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். போலீஸ் வெர்சனின் பல கதைகளின் உண்மையை சொன்னது நக்கீரன். அதனாலேயே வீரப்பனைப் பற்றியும், அந்த மக்களைப் பற்றியும் நக்கீரன்தான் சொல்ல முடியும். படைப்புகள் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்படும். அப்படி விவாதத்தை உண்டாக்குகிற படைப்புகள் மேன்மையானவை. அந்த வகையில் கூச முனுசாமி வீரப்பன் ஒரு முக்கிய படைப்பாகும்” என்றார்.

இந்த படைப்பின் ஆராய்ச்சிக்காக சென்றபோது சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தினை வசந்த பாலகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். அதாவது, “கர்நாடகா அருகே புளிஞ்சூர் கிராமத்தில் வீரப்பனை காட்டிக் கொடுத்தவர்களை விசாரித்து கொல்வதற்காக வந்திருந்தபோது மலை அடிவாரத்தில் ஒரு எல்லையில் வீரப்பன் விசாரிக்கிறார் என்றால், அதன் மற்றொரு எல்லைக்கு மக்கள் பதறியடித்து ஓடுகிறார்கள். அப்போது ஒரு குழந்தை கூட்டத்தில் மிதிப்பட்டு செத்துப் போனது. இதுபோன்று பல உயிர்கள் இறந்து போயிருக்கிறது. காவல்துறையால் பல உயிரிழப்புகள் நடந்தாலும் வீரப்பனாலும் அந்த மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இரண்டையுமே சொல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். அதை சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறோம்” என்றார்.

சார்ந்த செய்திகள்