உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.

தற்போது இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29- ஆம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனால் மக்கள் பெரும்பாலானோர் அதிர்ச்சிக்குள்ளாகி கூட்டம் கூட்டமாக கடைகளுக்குச் சென்று நான்கு நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வசந்த பலன் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாளை முதல் அடுத்த நான்கு நாட்கள் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என்ற அரசின் திடீர் அறிவிப்பு நேற்றிரவு முதல் பெரும் பதற்றத்தை உண்டாக்கி விட்டது.

காலை சென்னை கேகே நகரில் உள்ள அனைத்து சிறு பெரு மளிகைக் கடைகளும் காய்கறிக் கடைகளும் நிறைந்து வழிந்தன. போக்குவரத்து நெரிசலே ஏறபட்டுவிட்டது. கரோனா நம்மைத் தாக்கிவிடும் என்கிற பயத்தை மறந்து இந்த நான்கு நாட்கள் நமக்கு உணவு எதுவும் கிடைக்காமல் போய்விடப்போகிறது என்கிற பதற்றமே மக்களிடம் மேலோங்கி இருப்பதைக் கண்டேன்.
காலை 8:30 மணிக்கு சிறிய காய்கறிக் கடை ஒன்றில் வரிசையில் நின்றேன். ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நிறைந்து வழிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரிசையில் நின்றேன். மக்கள் வாங்கிக் குவித்தார்கள். மிஞ்சிய காய்களை வாங்கி விட்டு வீடடைந்தேன். இத்தனை நாள் நாம் கடைப்பிடித்த சமூக விலகல் மற்றும் ஒழுங்கு இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது என்பதுதான் வருத்தம் தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.