
விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பொங்கலை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தணிக்கைக்கு அனுப்பியுள்ள நிலையில் அக்குழுவினர் ரிஜெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பிரதி முழுமையாக தயாராகவில்லை என்ற காரணத்தினால் தணிக்கைகுழு ரிஜெக்ட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளில் பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வாரிசு சொன்ன தேதியில் அங்கு வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழ் பதிப்பு மட்டும் வெளியாகிறதாம். ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை என்றும் அதற்கான தணிக்கை வரும் திங்கட்கிழமையே நடைபெறவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குழப்பத்தின் காரணமாக 11ஆம் தேதி வெளியாகவுள்ள வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு, வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.