Advertisment

பார்த்திபனின் மூன்று முகங்கள்!

Parthiepan

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்துடன் திரையுலகில் இயங்கி வருபவர் பார்த்திபன். இயக்குநர் கே.பாக்யராஜின் உதவி இயக்குநரான இவர், 'புதிய பாதை' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். வழக்கத்திற்கு மாறாக ஒரு விஷயத்தை அணுகும் விதம் மற்றும் தன்னுடைய வித்தியாசமான செயல்கள் மூலம் எப்போதும் கவனம் ஈர்க்கும் பார்த்திபன், சமீபத்தில் 'ஒத்த செருப்பு' என்ற வித்தியாசமான படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படம் வெளியான போது, தனி ஒருவராகப் படம் முழுவதும் திரையில் தோன்றி ஒருவர் நடிப்பது இந்திய சினிமாவில் புதிய மற்றும் பெருமுயற்சியாகப் பார்க்கப்பட்டது; பாராட்டப்பட்டது.நேற்று நடந்த 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறப்பு நடுவர் தேர்வுப் பிரிவில் தேசிய விருதை வென்றது, ஒத்த செருப்பு திரைப்படம். இதனையடுத்து, பார்த்திபனுக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேடைகளில் காணும்பார்த்திபன், நடிகர் பார்த்திபன், இயக்குநர் பார்த்திபன் என மூன்று வகைகளில் பார்த்திபனை அடையாளம் காணலாம்.

Advertisment

மேடைகளில் தோன்றும் பார்த்திபன், தன்னுடைய வித்தியாசமான செயல்கள் மற்றும் பேச்சுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் கலையறிந்தவர். பாராட்டுவது, கிஃப்ட் வழங்குவதில் கூட தன்னுடைய தனித்தன்மையைக் காட்டும் பார்த்திபனுக்கு, அதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

Advertisment

நடிகர் பார்த்திபன், நகைச்சுவை இயல்புடன் கூடிய தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களையும் ரசிக்க வைக்கக்கூடியவர். ஹீரோவாக நடித்தாலும், வில்லனாக நடித்தாலும் இது பொருந்தும். ஹீரோவாக நடித்த 'வெற்றிக்கொடி கட்டு' மற்றும் 'குண்டக்க மண்டக்க' படங்களில் பார்த்திபன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி அல்லது சுற்றி அமைந்த காமெடிகள் இன்றைய 2K கிட்ஸ்களையும் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டவை. 'நானும் ரௌடிதான்', 'அயோக்கியா' உள்ளிட்ட வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகளும் ரசிக்கத்தக்கவை.

இவையனைத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்டவர் இயக்குநர் பார்த்திபன். 1989-ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் திரைப்படமான 'புதிய பாதை' திரைப்படம் தமிழ் சினிமாவிற்கும் புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. ரசிகர்கள் மத்தியில் அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதும் தமிழ் சினிமாவில் பார்த்திபனை கவனிக்கத்தக்க இயக்குநராக்கின. 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'ஹவுஸ் ஃபுல்' திரைப்படமும் அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப்படப் பிரிவில் தேசிய விருதினை வென்றது. தற்போது மூன்றாவது முறையாக பார்த்திபன் படத்தைத் தேடி வந்திருக்கிறது, தேசிய விருது.

cnc

பொதுவாக விருதுகள் என்பது இரண்டாம் பட்சமானவையே. கலைஞனுக்கான முதல் அங்கீகாரம் மக்களின் கைத்தட்டல்தான் எனப் பலரும் கூறி நாம் கேட்டிருப்போம். வெளியே இவ்வாறு கூறுபவர்கள்கூட, தங்களின் படம் விருதிற்குத் தேர்வு பெறவில்லை என்பதை அறியும்போது உள்ளுக்குள் அதிருப்தியடைவார்கள். இருப்பினும், சிலர் அதை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. ஆனால், பார்த்திபன் இதில் சற்று மாறுபட்டவர். மக்கள் அங்கீகாரமோ, விருதோ; தன் படத்திற்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் உரிய இடத்தில் கிடைக்கவில்லை என்றால், அந்த இடத்திலேயே தனது ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திவிடக் கூடியவர். 'ஒத்த செருப்பு' படத்திற்கு விருது வழங்கவில்லை என்ற அதிருப்தியை ஒரு விழா மேடையில் வெளிப்படுத்தி அனைவரையும் அதிரச் செய்தது சமீபத்திய உதாரணம். புது முயற்சியைக் கையாளுவதில் பிரியரான பார்த்திபன், தற்போது 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளார். இது, முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்படவுள்ள திரைப்படமாகும்.

இத்தகைய துணிச்சலும், புதுமையும், வெளிப்படைத்தன்மையும் நிறைந்த பார்த்திபன் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துவோம்.

ACTOR PARTHIBAN
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe