/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vanitha-vijayakumar_4.jpg)
பிக்பாஸ் சீஸன் 3 போட்டியின் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இவர் தற்போது ஹர்பஜன் சிங்குடன் ஃப்ரண்ட்ஷிப் என்னும் தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது. சமீபத்தில் கனாடாவை சேர்ந்த தொழிலதிபருடன் அவருக்கு திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியானது. அந்த செய்திக்கு மறுப்பும் தெரிவித்தார் லாஸ்லியா.
இந்நிலையில் கனடாவில் பணிபுரிந்து வரும் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக முந்தாநாள் இரவு மரணமடைந்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் இருப்பதால் லாஸ்லியாவின் தந்தையின் உடலை இலங்கைக்கு எடுத்து செல்வதில் பெரும் சிக்கல் உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேபோல லாஸ்லியாவும் உடனடியாக இலங்கைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் தெரிவிக்கையில், “லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்துக் கேள்விப்பட்டதும் மிகவும் சோகமாக இருக்கிறோம். அவர்கள் இதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்தான் வீட்டில் சம்பாதித்துக் கொண்டிருந்தவர். மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முற்றிலும் ஊகிக்க முடியாதபடி இருக்கிறது. பயமாக இருக்கிறது. அவரது உடலையாவது நேரத்துக்குக் கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.
நான் லாஸ்லியாவிடம் பேசினேன். அவர் உடைந்து போயிருக்கிறார், அழுது கொண்டிருந்தார். ஆனால் கண்டிப்பாக அவர் வலிமையாக இருப்பார். இலங்கைக்குச் செல்ல முயன்று கொண்டிருக்கிறார். தூதரகம் வழியாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு உதவி வருகிறது. கரோனா பிரச்சினை காரணமாக உடனடியாக மரியநேசனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர முடியவில்லை. லாஸ்லியாவுக்கு என் அன்பையும், ஆசீர்வாதங்களையும் தந்திருக்கிறேன்.
இப்போதுதான் அபிராமி உள்ளிட்ட இன்னும் சில பிக் பாஸ்-3 போட்டியாளர்களிடம் பேசினேன். அனைவரும் லாஸ்லியாவுடன் தொடர்பில் இருக்கிறோம். அவரது இந்தப் பயணச் சிக்கலைச் சரிசெய்ய எங்கள் உதவியையும், ஆதரவையும் தருகிறோம். ஏதாவது நடக்கும் என நம்புகிறேன். இறைவன் அவரோடு இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)