“நன்றி கார்டு போட்டதற்கு பணம் கேட்கிறார்” - இளையராஜா குறித்து வனிதா விஜயகுமார்

282

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’(Mrs & Mr). இப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் பேனரில் வணிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கிரன், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கிரன் வரும் காட்சியில் இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.  

இந்த நிலையில் இளையராஜா தன்னுடைய அனுமதி இல்லாமல் ‘சிவராத்திரி தூக்கமேது’ பாடலை பயன்படுத்தியுள்ளதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனு குறித்து தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனிதா விஜயகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இளையராஜாவின் 4850 பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து வனிதா விஜயகுமார் பாடலை வாங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதை நீக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்க்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமார், “எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் கிடையாது. சோனி நிறுவனத்திடம் முறையாக பாடலை பெற்ற பின்பு தான் பயன்படுத்தினேன். அவங்களைத் தான் இளையராஜா கேட்க வேண்டுமே தவிர அவர்களிடம் அனுமதி வாங்கிய என்னை கேட்கக்கூடாது. இதைத் தாண்டி இளையராஜாவுக்குப் படத்தில் நன்றி கார்டு போட்டிருக்கேன். ஆனால் அவர், கார்டு மூலம் நான் விளம்பரம் பண்ணுவதாக என்னிடம் பணம் கேட்கிறார். அந்தளவு நான் சம்பாதிக்கவில்லை. அதே சமயம் நன்றின்னு சொன்ன பிறகு பணம் கேட்பது தவறு. 

யூட்யூபில் என்னுடைய சேனலில் படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கேன். அதில் இளையரஜாவுக்கு போட்ட நன்றி கார்டை தூக்கிவிட்டோம். பாடலை பொறுத்தவரை சோனி நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும். இளையராஜா வீட்டில் நான் வளர்ந்திருக்கேன். ஒரு ஃபோன் போட்டு கார்டை நீக்க சொன்னால் நீக்கியிருப்பேன். அவருக்கு அவ்வளவு உரிமை உண்டு. ஆனால் என் மேல் கேஸ் போட்டு திருட்டு பட்டம் கட்டி அசிங்கப்படுத்திவிட்டார்” என்றார்.

 

Ilaiyaraaja MADRAS HIGH COURT vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Subscribe