
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு கருத்தையோ அறிக்கையையோ வெளியிட்டுத் தன்னைப் பற்றிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதேபோல படவாய்ப்புகள் குறைந்தாலும் திரையுலகில் வனிதா விஜயகுமாரின் பரபரப்பு இருந்துகொண்டே இருக்கும்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, பீட்டர் பாலை திருமணம் செய்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார் நடிகை வனிதா. பீட்டர் பாலுடன் திருமணத்திற்குப் பின் காவல் நிலையத்தில் புகார், வழக்கு என பரபரப்பை ஏற்படுத்தினார். சில மாதங்கள் அமைதியாக இருந்த நிலையில், பீட்டர் பாலின் செயல்பாடுகள் குறித்து, கருத்துத் தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பா.ஜ.க.வில் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மோடி பிரதமரான பின்பு, ஒவ்வொரு மாநிலங்களிலும் பிரபலங்களைக் கட்சியில் இணைத்து வருகிறது பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க இல்லாவிட்டாலும், தன்னைப் பற்றிய விவாதம் நடைபெறும் சூழலை அந்தக் கட்சி உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கங்கை அமரனை கட்சியில் இணைத்ததை தொடர்ந்து பல திரை நட்சத்திரங்களையும் இணைத்து வருகிறது. ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் மாநில அளவில் பொறுப்பிலும் உள்ளனர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார் குஷ்பு. அப்போதிலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில்தான், வனிதா விஜயகுமாரை இணைக்க பா.ஜ.க கட்சித் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விரைவில் அவர் இணைவார் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். பா.ஜ.க பொதுக் கூட்டங்கள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரங்களில், பிரச்சாரப் பீரங்கியாக வனிதாவை களமிறக்க பா.ஜ.க அதிரடி பிளான் போட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை வனிதா தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.