Skip to main content

சந்தேக மரணம்? - வாணி ஜெயராம் மறைவு குறித்து பணிப்பெண் அதிர்ச்சி தகவல்

 

Vani Jayaram's passed away shocking news from the house maid

 

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது. 

 

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்க்கொடி என்பவர் என்ன நடந்தது என்பதை செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார். மலர்க்கொடி கூறுகையில், "எப்பொழுதும் காலை 10 மணிக்கு வந்து வேலை செய்து முடித்துவிட்டு மதியம் 12 மணிக்கு திரும்பி விடுவேன். அது போலத்தான் இன்று காலையிலும் 10 மணிக்கு வந்தேன். வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன். திறக்கவில்லை. தொடர்ந்து ஐந்து முறை அழுத்தினேன். அப்போதும் திறக்கவில்லை. 

 

பின்பு எனக்கு சந்தேகம் வந்து வாணி ஜெயராமுக்கு போன் செய்தேன். அவங்க எடுக்கவில்லை. எனது கணவரிடம் சொல்லி போன் செய்ய சொன்னேன். அப்போதும் அவங்க எடுக்கவில்லை. பிறகு வீட்டின் அருகே உள்ளவரிடம் தகவல் சொல்லி கதவை திறந்தோம். உள்ளே போய் பார்த்தபோது தலையில் (நெற்றியில்) காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தாங்க. நல்ல உடல் நலத்தோடு தான் இருந்தாங்க. என்னுடைய அம்மா மாதிரி அவங்க. நாங்க தாய் பொண்ணு போலதான் பழகுவோம். இந்த வீட்டில் "  எனக் கூறியுள்ளார்.

 

மேலும், இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில், வாணி ஜெயராம் மறைவை சந்தேக மரணம் (174) என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் முதல் கட்ட தகவலில், வாணி ஜெயராம் அறையின் படுக்கையிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் உள்ள டேபிளில் தலை அடிபட்டு நெற்றியில் காயத்துடன் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. வாணி ஜெயராமின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

மருத்துவ சிகிச்சை எதுவும் எடுக்காமல் நல்ல உடல்நலத்தோடு வாணி ஜெயராம் இருந்த நிலையில் தலையில் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததாக பணிப்பெண் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.