
பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படம் கடந்த ஜூலையில் வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால் அம்மாதத்தில் இப்படம் வெளியாகவில்லை.
பின்பு அருண் விஜய், இப்படம் குறித்தும் பாலா குறித்து நெகிழ்ச்சியுடன் நேற்று ஒரு பதிவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதனை இன்று பிறந்தநாள் காணும் அருண் விஜய்க்கு பரிசு கொடுக்கும் விதமாக அவர் பகிர்ந்துள்ளதாக தனது பதிவில் சுரேஷ காமாட்சி குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் - ஆதிக்ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட்-பேட்-அக்லி படமும், ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தித்திக்கும் உங்களின் இப் பிறந்த நாளில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் வணங்கான் வெளியீடு என்ற கரும்பின் சுவையைப் பரிசாகத் தருகிறோம். மகிழ்ச்சியின் இனிப்பு மனதாரப் பரவி, புன்னகை என்றும் எங்கும் வழிந்தோடி, வெற்றியின் பிள்ளைகளைத் தாலாட்டி வென்று வாழ இயற்கையும்.. இறையும் துணை… pic.twitter.com/VDLXKrCoHR— sureshkamatchi (@sureshkamatchi) November 19, 2024