
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்தது. இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வடிவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த மோஷன் போஸ்டர், யூ-டியூப் தளத்தில் இந்திய அளவில் அதிகபட்ச லைக்ஸ்களைப் பெற்ற மோஷன் போஸ்டர் எனும் சாதனையைப் படைத்துள்ளது. தீபாவளி தினத்தன்று படத்தைத் திரைக்கு கொண்டுவரும் யோசனையில் உள்ள படக்குழு, எஞ்சியுள்ள சண்டைக்காட்சியை விரைந்து படமாக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக ‘வலிமை’ படக்குழு மிகக்குறைந்த அளவிலான ஆட்களுடன் அடுத்த மாதம் ஐரோப்பா பயணிக்கவுள்ளனர். அங்கு ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதோடு 'வலிமை' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது. இதையடுத்து இரண்டாவது லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் டீசர் ஆகியவற்றை ஆகஸ்ட் மாதத்திற்குள்ளேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)