'நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்தது.
‘வலிமை’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை மோஷன் போஸ்டர் வடிவில் வெளியிட்ட படக்குழு, படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், எஞ்சிய ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கப் படக்குழு தற்போது தயாராகிவருகிறது. நடிகர் அஜித் நேரடியாக ஈடுபடும் பிரம்மாண்டமான அந்த சண்டைக் காட்சியை ஸ்பெயினில் படமாக்கப் படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது அதிகரித்துவரும் கரோனா பரவலால், ஐரோப்பாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதைக் கவனத்தில் எடுத்த படக்குழு, அச்சண்டைக் காட்சியை ரஷ்யாவில் படமாக்க முடிவுசெய்துள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி ஒரே கட்டமாக சண்டைக் காட்சியை நிறைவுசெய்யத் திட்டமிட்டுள்ள படக்குழு, குறைந்த அளவிலான ஆட்களுடன் விரைவில் ரஷ்யா பறக்கவுள்ளது.