valimai

Advertisment

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்த ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டும் எஞ்சியுள்ள நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு அதை இந்தியாவிலேயே படமாக்கும் யோசனையில் படக்குழு உள்ளது. இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது மே 1ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கரோனா பரவலால் இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடிநிலை காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவோம் என அறிவித்திருந்தோம்.

அந்த அறிவிப்பை வெளியிடும்போது, கரோனா நோயின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் சுனாமி போல தாக்கும் என்று நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதார ரீதியாகவும் தங்களுடைய உறவுகளின் இழப்பு காரணமாக உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இத்தகையஅசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை மற்றுமொரு தேதிக்கு மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மே 1ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், சில ரசிகர்கள் மே 1ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை வெறும் ட்வீட்டில் தெரிவித்துவிட்டு, தற்போது அப்டேட் இல்லை என்பதை மட்டும் அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கிறீர்களே எனபோனி கபூரை கிண்டலும் விமர்சனமும் செய்து வருகின்றனர்.