valentine's day special - actor ajith's love story

Advertisment

திரையில் தான் பார்த்து ரசிக்கும் சில ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக இருந்தால் சிறப்பாக இருக்குமே என்று ரசிகர்கள் விரும்புவதும் நினைப்பதும் உண்டு. சில நடிகர் நடிகைக்கு இடையேயான கெமிஸ்ட்ரி அந்த அளவிற்கு சிறப்பானதாக இருக்கும். இருப்பினும், அனைத்து ரீல் ஜோடிகளும் ரியல் ஜோடிகளாவதில்லை. ரசிகர்களின் இந்த நினைப்பை நிஜமாக்கியவர்களில் பாக்யராஜ்-பூர்ணிமா, பார்த்தீபன்-சீதா, அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா ஜோடிகளைக் குறிப்பிடலாம். இதில், அஜித்-ஷாலினிக்கு இடையேயான காதல் கதை, சற்று வித்தியாசமானது. இருவரும் இணைந்து நடித்த முதல் படமான 'அமர்களம்' திரைப்படத்திலேயே இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

நடிகை ஷாலினி உடனான முதல் அறிமுகம் மற்றும் காதல் பற்றி ஒருமுறை அஜித் கூறும்போது, "1987 காலகட்டத்தில் என்னுடைய வீடு மந்தைவெளியில் இருந்தது. எனக்கு திருட்டு தம் அடிக்கும் பழக்கம் அப்போது உண்டு. என் வீட்டு பால்கனியில் இருந்து ஒரு முறை தம் அடித்துக்கொண்டிருக்கையில் பக்கத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் உடன் இருந்தவர்களிடம் என்ன ஷூட்டிங் என்று கேட்கையில், 'ஷங்கர் குரு' படத்திற்கான ஷூட்டிங் என்றும் பேபி ஷாலினி நடித்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார்கள். இவரைத்தான் பின்னாளில் திருமணம் செய்வேன் என்று அப்போது நினைத்துக் கூட பார்த்ததில்லை. என்னுடைய அமர்க்களம் படத்தில் ஷாலினியை கதாநாயகியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் முயற்சி செய்தார். ஷாலினி படிக்க திட்டமிட்டிருந்ததால், மறுத்துவிட்டார். பின், என்னை ஒரு முறை தயாரிப்பாளர் பேசிப் பார்க்கச் சொன்னார். நான் பேசும் போதும் அவர் அதேதான் சொன்னார். நான் தொடர்ந்து முயற்சித்தும் அவர் விருப்பமில்லை என்றே கூறி வந்தார். பின் தயாரிப்பாளர் நீண்ட முயற்சிக்குப் பிறகு அவரைச் சம்மதிக்க வைத்தார். நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு அப்படித்தான் அமைந்தது. ஷாலினிக்கும் எனக்கும் இடையேயான காதல் 'லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்' தான்" என்றார்.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்வு பற்றி அஜித் கூறுகையில், "படப்பிடிப்பில் கத்தி பயன்படுத்தும் போது அது ஷாலினி கையில் தவறுதலாக வெட்டிவிட்டது. மானிட்டர் பார்க்கும் போதுதான் எனக்கு அது தெரியவந்தது. அந்தக் காட்சியை படமாக்கும் முன்பே உள்ளே இருந்த பிளேடை எடுத்துவிடச் சொன்னேன். அவர்களும் நீக்கிவிட்டார்கள். ஆனால், அந்தக் கத்தியின் உள்பாகம் நழுவி அவர் கையில் காயப்படுத்திவிட்டது" எனக் கூறினார்.

Advertisment

இந்த சம்பவத்தின் போது, அந்தச் சூழலை ஷாலினி எவ்வித பதற்றமும் இன்றி கையாண்டது தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக ஷாலினியுடன் இணைந்து கொடுத்த ஒரு பேட்டியில் அஜித் கூறினார். தான் ஒரு பெரிய நடிகர் என்பதை மறந்து அந்த நேரத்தில் பதட்டத்துடன் தன்னை அக்கறையாகக் கவனித்துக் கொண்டதைக் கண்டு வியந்து போய்விட்டதாக அதே பேட்டியில் ஷாலினியும் கூறினார்.