Skip to main content

மணிரத்னத்தின் 'காதலர்கள்'!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

காதல் இல்லாமல் சினிமா இல்லை, அதிலும் இந்திய சினிமாக்களில் காதல் அன்றிலிருந்து இன்றுவரை நீங்காமல் நிறைந்திருக்கிறது, பாகுபாடில்லாமல் பரவியிருக்கிறது. இந்திய சினிமாத்துறையில் அவ்வளவு டூயட்களும், காதல் காட்சிகளும் திகட்டத் திகட்ட காட்டப்பட்டுவிட்டது. காதல் புனிதமானது, தவறானது என படங்களில் எதிரெதிர் கருத்துகள், வேறுபாடுகள் இருந்தாலும் காதல் இல்லாமல் இங்கு படங்கள் இல்லை. அப்படி எங்கும் காதல் எதிலும் காதல் என இருக்கும் இந்திய சினிமாவில் காதல் படங்கள் எடுப்பதில் தனித்துவமானவர் மணிரத்னம்!
 

alaipayuthey

 

 

மணிரத்னம் எப்படி தனித்துவமாக இருக்கிறார், அடுத்தவர்களுக்கு இன்ஸ்பிரேஷனான காதல் படங்களை கொடுக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. “நான் உன்னை விரும்பல, உன் மேல ஆசைப்படல, நீ அழகா இருக்கனு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்துருமோனு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு” - இந்த வசனத்தை காதலன் தன்னுடைய அன்பான காதலியை பார்த்துக்  கூறுகிறார். அதாவது காதலன் தன்னுடைய காதலை காதலியிடம் சொல்லும் காட்சி... இதிலேயே மணிரத்னம் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறார். குறிப்பாக தமிழ் சினிமாவில் காதலை சொல்லும் காட்சி என்றால் வசனம் எதுகையிலும் மோனையிலும் பின்னி பெடலெடுக்கும், அல்லது ஓவர் எமோஷனலாக, பார்ப்பவர்களை உருக வைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் எழுதப்பட்டதாக இருக்கும். ஆனால், மணிரத்னமோ இவர்களிடமிருந்து சற்று தள்ளி நின்று காதலை சொல்லும் காட்சிகளை சற்று யதார்த்தத்தை மீறிய மேஜிக் வார்த்தைகளில் கவிதை தன்மையுடன் எழுதுகிறார். கண்டிப்பாக யதார்த்தம் இங்கு மிஸ்ஸாகிறதுதான். ஆனாலும் அவருடைய மேஜிக் வசனங்கள் வொர்க்கவுட் ஆகிறது. இதுபோல அவருடைய அனைத்து படங்களிலும் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் உணரலாம். இவ்வளவு ஏன்... சுருக்கமாக 'நறுக்' என்று பதில் சொன்னாலே  ‘நீ என்ன மணிரத்னம் பட ஹீரோவா?’ என கேட்கும் அளவிற்கு இருக்கிறது இவருடைய ஸ்டைலின் தாக்கம்.
 

mounaragam


வசன பாணியை மட்டும் மற்றவர்களிடமிருந்து மாற்றியிருப்பதால் அவர் தனித்துவமானவர் என்று சொல்லப்படுவதில்லை, இவரது நாயகர்களின் துறு துறு கதாபாத்திரம் படத்தை பார்க்கும் பெண்களுக்கு மிகவும் பிடித்துவிடும். குறிப்பிட்டு சொல்ல அவசியமில்லை, இதை படிக்கும் பெரும்பாலானவர்களுக்கு 'மௌனராகம்' கார்த்திக்கின் கதாபாத்திரம் மனதில் தோன்றுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவருடைய கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம் அப்படி. அந்தப் படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் துறு துறுவென இருப்பதால் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்தப் படம் மட்டுமின்றி மணிரத்னத்தின் பிற படங்களிலும் நாயகன் கதாபாத்திரம் எந்த மாதிரியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்தும்போதும் சொல்லும்போதும் போதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். கவிதை தன்மை அவர்களுக்கு எப்படி வருமென தெரியாது ஆனால் பார்ப்பதிலிருந்து, பேசுவதிலிருந்து எது செய்தாலும் காண்பவரை ரசிக்க வைப்பார்கள். 'ரோஜா', 'பம்பாய்' அரவிந்த்சாமி,  'அலைபாயுதே' மாதவன், 'ஆயுத எழுத்து' சூர்யா, சித்தார்த், 'காற்று வெளியிடை' கார்த்தி... இப்படி அவருடைய படங்களில் வரும் நாயகர்களை யோசித்து பாருங்கள் புரிந்துவிடும். அவர்கள் தங்கள் சேட்டைகளால், தங்கள் வெளிப்படையான தன்மையால், தாங்களே முன்வந்து முடிவு தெரியும் முன்னரே உரிமை எடுத்து ரொமான்ஸ் பண்ணும் தன்மையால் நாயகிகளை திடுக்கிட செய்வார்கள், சிலிர்த்துப்போக செய்வார்கள், ஒரு நிமிடம் அசந்து குழம்பச் செய்வார்கள்.      
 

day night


காதல் படங்களில் தனித்துவமானவர் மணி. ஆனாலும் முழுக்க முழுக்க காதல் படங்களையே அவர் கொடுக்கவில்லை. வேறு தீவிரமான கதைகளை பேசும் படங்களான இருவர், குரு, ஆய்த எழுத்து போன்ற படங்களிலும் காதல் ட்ராக்குகளை, பாடல் காட்சிகளை அருமையாக கம்போஸ் செய்வதுபோல செய்திருப்பார். இருவர், இரண்டு அரசியல்வாதிகள் குறித்த படம். அதில் இரண்டு நாயகர்களின் காதலிலும் அரசியல் இருக்காது, முழுவதும் கவிதைதான். ஆய்த எழுத்து படத்தின் கரு அரசியல் என்றாலும் மூன்று பேரும் அவர்களுக்கு ஏற்றார்போல கோலாகலமாகக் காதலித்துக்கொண்டுதான் இருப்பார்கள். மாதவன், ரௌடியாக இருந்தாலும் காதலியிடம் அரக்கனாக கோபப்பட்டாலும் அவர் பொழியும் காதல் மணி ஸ்டைல். அதேபோலத்தான் சமூக அக்கறைக்கொண்ட சூர்யா, காதல் காட்சிகளில் காதலியுடன் பழகும்போது ஒரு ரோமியோவாகவே இருப்பார். முழு படமும் காதலை மையப்படுத்தி இல்லையென்றாலும் அதில் வரும் காதல் காட்சிகளில் மணிரத்னத்தின் தனித்துவமான காதல்கள் வெளிப்படுகிறது.
 

bombay


காதல் படங்களில் அருமையான பாடல்களும் பாடல் காட்சிகளும் இருந்தாலே அதை வைத்து இது ஒரு காதல் காவியமென விளம்பரப்படுத்திவிடுவார்கள். அந்தளவிற்கு காதல் படங்களில் வரும் டூயட், மெலடி என எந்த டைப்பான பாடலாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களிலும் மணிரத்னம் தனித்துவமானவர்தான். மணிரத்னம் படங்களில் பொதுவாக வரும் கேமரா கலர், ஆங்கிளே வித்தியாசமாக இருக்கும். பாடல்களின் போது எல்லோரும் ஒரு டெம்ப்ளேட்டாக மரத்தை சுற்றி டூயட் பாடினால், இவர் பாடல்களை மாண்டேஜில் காட்சிப்படுத்திவிடுவார். அவை மிக அழகிய நிகழ்வுகளாக இருக்கும். தாஜ்மஹால், இவரது படங்களில் வேறாகத் தெரியும். நாம் பார்த்த கடலும் மலையும் மணிரத்னம் படங்களில் இன்னும் அழகாக இருக்கும். தமிழ் சினிமாவின் இரண்டு இசை ஜாம்பவான்களிடம் பணிபுரிந்தவர் மணி. இளையராஜாவுடன் இணைந்திருந்தபோது இவர் படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு ஆனந்தம் என்றால், ரஹ்மானை சினிமாவில் அறிமுகப்படுத்தி ரோஜாவில் இவர் தந்த பாடல்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. ஆம், மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி தந்தன 'ரோஜா' பாடல்கள். 'காதல் ரோஜா'வே பாடலை இன்றும் கேட்டு கண் கலங்கும் காதலர்கள் இருக்கின்றனர். 'பம்பாய்' படத்தில் வரும் 'உயிரே உயிரே' பாடல் இன்னும் பலரின் வாட்ஸப் ஸ்டேட்டஸாக வலம் வருகிறது. தமிழக இளைஞர்களுக்கு மணிரத்னம் தந்த மிகப்பெரிய பரிசு அவரது படங்களின் காதல் பாடல்கள்.
 

ok kanmani

 

 

அதுபோல தமிழகத்தில் காலம் காலமாக காதலில் நடந்துவரும் பரிணாம வளர்ச்சி, மணிரத்னம் படங்களில் முன்பே வந்துவிடும். காதலன் இறந்தபின் வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் ஹீரோயின், வேறு மதம் என்பதால் தங்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத குடும்பத்தை பிரிந்து வாழும் காதலர்கள், வீட்டிற்குத் தெரியாமல் தனக்குப் பிடித்தவரை திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனியாக வாழும் காதலர்கள், திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் 'லிவ்வின்' வாழ்க்கை வாழும் இளைஞர்கள் என்று தன்னுடைய படங்களில் அந்தந்த தலைமுறையின் முன்பே சொல்லி படங்களை எடுத்திருப்பார் மணிரத்னம். சமீப காலமாக அவரது படங்களின் காட்சிகள் குறித்து சில விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், அவரது நாயகர்களின் காதல் மிகைப்படுத்தப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அத்தனையையும் தாண்டி நினைவில் நிற்பார்கள் மணிரத்னத்தின் 'காதலர்கள்'.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

அதே காரணம் - கமல் படத்திலிருந்து வெளியேறும் மற்றொரு முன்னணி நடிகர் 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
jayam ravi exist in kamal thug life movie

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மானை தொடர்ந்து ஜெயம் ரவியும் வெளியேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவரும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது.