Advertisment

"எனக்கு அறிவித்த விருதை அவர்களுக்கே திருப்பி அளிக்கிறேன்" - கவிப்பேரரசு வைரமுத்து அதிரடி!

jgjgjg

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதுபெற்ற கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், தேசிய விருதுபெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி பெயரில் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பைச் செய்பவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஓ.என்.வி விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருதை மலையாளி அல்லாத கவிஞர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை. விருதுபெறும் வைரமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில், இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தன. இதனால், “ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்” என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது. இதற்குத் தமிழ்த் திரையுலகில் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த விருதைத் திருப்பித் தருவதாக கவிப்பேரரசு வைரமுத்து வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். அதில்...

Advertisment

"அனைவரையும் வணங்குகிறேன். கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

Advertisment

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமைசெய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி" என கூறியுள்ளார்.

kavignar vairamuthu Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe