Skip to main content

'இனி நான் முழுக்க உங்களுக்கு தான்...' மேடையில் கண்ணீருடன் நெகிழ்ந்த வைரமுத்து !

நெடுநல்வாடை படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம். அப்படியான ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியபோது....

 

vairamuthu

 

சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். ஆனால் நான் இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கி விட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும். ஒரு குடும்பத்தில் ஒரு இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா? ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா? கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். "தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய  ஊதியம் தரமுடியுமா? ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு  கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது? இந்தப்படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார். அதைவிட இந்த நெடுநல்வாடை படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள். நுட்பமான விசயங்கள் நெடுநல்வாடை படத்தில் இருக்கும். கணவன் வீட்டில் இருந்து குழந்தைகளோடு வரும் ஒருதாய் கிணற்றை எட்டிப்பார்க்கும்  காட்சியில் என் மனம் துடித்துவிட்டது.

 

 

இந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா? இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான்.  படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது  கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இளையராஜாவின் சாயல் இருப்பதாய் ஒரு பத்திரிகை எழுதி இருந்தது. இது உனக்குப் பாராட்டு தம்பி. ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். எடிட்டர் காசி விஸ்வநாதன் இந்தப்படத்தின் பொக்கிஷம். எஸ்கேப்.ஆர்டிஸ்ட் மதனுக்கு நன்றி. தமிழ் திரைப்பட பாடல்கள் சற்றே தொய்வடைந்து இருக்கிறது. படத்தின் நீளமும் குறைந்து விட்டது. 2 மணிநேரம் பத்து நிமிடங்கள் உள்ள படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். அதுபோல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை என்பேன். 

 

 

தமிழாற்றுப்படையை இன்றோடு நான் நிறைவு செய்திருக்கிறேன். மொத்தம் 23 ஆளுமைகள் தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், இளங்கோ, கம்பர், திருவள்ளுவர், ஆண்டாள், அப்பர், திருமூலர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், கலைஞர், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், இந்த வரிசையில் அண்ணாவை கடந்த மாதம் அரங்கேற்றினேன் 23வது ஆளுமையாக. 24வது ஆளுமையாக திருச்சியில் மே மாதம் 5ஆம் தேதி அரங்கேற்றுகிறேன் பெரியார். அதோடு தமிழாற்றுப்படையின் பெரும்பணி தற்காலிமாக நிறுத்தப்படுகிறது. மேலும் இது நூலாக வெளிவருகிறது ஜூலை 12ல். இனி முழுக்க நான் உங்களுக்கு. திரைப்பட பாட்டுக்கு. கவிதைக்கு. இந்த வேலை, இதற்காகத்தான் நான் இரண்டரை ஆண்டுகள் தவம் செய்து கொண்டிருந்தேன். இரண்டரை ஆண்டு முடிந்தது. வனவாசம் முடிந்தது. வெளியே வருகிறேன். திரும்பவும் திரைப்பட பாட்டு எழுத ஆசைப்படுகிறேன். திரைப்படப்பாட்டுக்கு நல்ல நண்பர்கள் கை கொடுத்தால் இன்னும் அதன் உயரத்தை கூட்ட விரும்புகிறேன். அனுபவத்தாலும், மொழியாலும், வாழ்க்கை செழித்து கிடக்கிறது. இந்த செழிப்பை தமிழர்களுக்கே தாரைவார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே மீண்டும், திரைப்படத்துறைக்கும், கவிதைத்துறைக்கும், என் நேரத்தின் பெரும் பங்கை செலவழிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நெடுநல்வாடையில் இதையும் ஒரு செய்தியாக சொல்லுகிறேன். வாழ்க இந்த குழு. வளர்க உங்கள் ஒத்துழைப்பிற்கு. மிக்க நன்றி" என்று கண்ணீருடன் நெகிழ்ந்தார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்