vairamuthu invited kamal for his book opening ceremony

Advertisment

கவிஞர் வைரமுத்து எழுத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் கவிதை நூல் ‘மகா கவிதை’. வைரமுத்துவின் 39வது படைப்பாக உருவாகியுள்ள இந்த புத்தகத்தில் நிலம் - நீர் - தீ - வளி - வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி இந்த நூல் வெளியாகவுள்ளது. அந்த நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கினார். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனிற்கு தற்போது வழங்கியுள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “மகா கவிதை வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை வழங்க வருகைதரும் கலைஞானிகமல்ஹாசனைச் சந்தித்து அழைப்பிதழும் நூலும் வழங்கினேன். எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த நாற்காலியில் 42ஆண்டு நினைவுகள் அமர்ந்திருந்தன. கலை அரசியல் மதம் என்று தவளைக்கல்லாய்த் தாவித்தாவி எண்ணூர் எண்ணெய்ப் பிசுக்கில் இடறி நின்றது உரையாடல்.

குடிதண்ணீர் எண்ணெய் ஆவதும் எண்ணெய் தண்ணீரின் ஆடையாவதும் காலங்காலமாய்க் கழுவப்படாத கண்ணீர்ப் பிசுக்கில் எண்ணெய்ப் பிசுக்கும் ஏறி நிற்பதும் மீனென்ற வேட்டைப் பொருளும் கொக்கென்ற வேட்டையாடு பொருளும் சேர்ந்து செத்து மிதப்பதும் நதி இறங்க வழியில்லாத கடலில் எண்ணெய் இறங்குவதும் உழைக்கும் மக்கள் பிழைக்க வழியின்றிப் பெருந்துயர் கொள்வதும் எத்துணை கொடுமையென்று சோகம் பகிர்ந்தோம்.‘இதற்கு யார் பொறுப்பு’என்றார் கமல் ‘லாபம் ஈட்டும் நிறுவனம்’ என்றேன். காஃபி கொடுத்தார் பாதிக்குமேல் என்னால் பருகமுடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment