தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2025) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம், கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீடு, சி.ஐ.டி. நகரில் உள்ள வீடு ஆகியவற்றிற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். மெரினாவில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், “கலைஞர் நினைவு நாளில் மட்டுமல்ல எல்லா நாட்களும் கலைஞர் நினைக்கப்பட வேண்டியவர் தான். தமிழ்நாடு அவரை மறக்காது. காரணம் தமிழ்நாட்டின் கட்டமைப்பை கட்டியெழுப்பிய சிற்பி அவர். இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சியை இரட்டை இலக்க வளர்ச்சியாக மாற்றியிருக்கிறார். இந்த மாற்றம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த இந்திய வெற்றி என்று சொல்ல வேண்டும். இந்த வெற்றிக்கு வேராகவும் விழுதாகவும் இருப்பவர் கலைஞர்” என்றார்.
பின்பு அவரிடம் தேசிய விருது அறிவிப்புகளில் ஆடுஜீவிதம், அயோத்தி படம் பெறவில்லை, இதில் அரசியல் இருப்பதாக நினைக்கிறீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியல் இருக்கிறதோ இல்லையோ, அதிருப்தி இருக்கிறது” என்றார். 2022ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது கொடுத்ததற்காக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், விருது குழுவை சாடியிருந்தார். அதே போல் நடிகை ஊர்வசியும் எதன் அடிப்படையில் விருது கொடுக்கப்படுகிறது என விமர்சனம் செய்திருந்தார்.
இதனிடையே ரசிகர்கள், அயோத்தி, ஆடுஜீவிதம், விடுதலை உள்ளிட்ட சில படங்களை குறிப்பிட்டு இந்தப் படத்திற்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இவர் 7 முறை தேசிய விருது வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.