‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...’ என இன்றும் தன் குரலால் மலர்ந்து கிடக்கிற எஸ்.பி.பி-யின் தேகம், இன்றுடன் மறைந்து 5 ஆண்டு ஆகிறது. இந்த ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் வழக்கம் போல் அவரது ரசிகர்கள் மற்றும் அவருடன் பயணித்த திரை பிரபலங்கள் அவரை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்த வருகின்றனர். இதனிடையே திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் அவரது புகைப்படம் வெளியே வைக்கப்பட்டுள்ளது. அங்கும் அவரது ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து எஸ்.பி.பி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நினைவு கூர்ந்தார். அவர் பகிர்ந்த பதிவு, “பாசமுள்ள பாட்டுக்காரா! நினைவு நாளில் அல்ல உன்னை நினைக்காத நாளில்லை.
நீ பாடும்போது உடனிருந்த நாட்கள் வாழ்வின் நிம்மதி நிமிடங்கள். ‘பொன்மாலைப் பொழுது’ உன் குரலின்
அழகியல் வசீகரம். ‘சங்கீத ஜாதிமுல்லை’ கண்ணீரின் திருவிழா. ‘காதல் ரோஜாவே’ கவிதைக் கதறல்.
‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம். ‘பனிவிழும் மலர்வனம்’ சிருங்காரச் சிற்பம்.
‘காதலே என் காதலே’ தோல்வியின் கொண்டாட்டம். ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய். உன் வரவால் திரைப்பாடல் பூச்சூடிநின்றது. உன் மறைவால் வெள்ளாடை சூடி நிற்கிறது” என்றார்.