Advertisment

“2 நகைச்சுவைகள் முட்டிக்கொண்டன... ” - தனது ஸ்டைலில் விவரித்த வைரமுத்து

vairamuthu about rajini durai murugan issue

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த பேசியபோது, “பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் பிரச்சினை. இங்கு அப்படி பலர் உள்ளனர். அவர்கள் எல்லாம் நல்ல ரேங்க் எடுத்தும் கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர். அவர்களை சமாளிப்பது கடினம். இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியவர்...” என்று கூறினார். ரஜினி கூறியதைப் பற்றி அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டியில், “அதே மாதிரிதாங்க. மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து நடிக்கின்றனர். வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதையெல்லாம் மறந்துட்டு ஏதோ ஒண்ணு பேசுறாரு” என்று பேசியிருந்தார்.

Advertisment

இருவரது கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. அந்த வகையில் அரசியல் சீனியர் மற்றும் சினிமா துறையில் சீனியர் என்ற விவாதங்களாக பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த விவாதங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், “அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது” என்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் முன் ரஜினி பதிலளித்தார். இதையடுத்து அமைச்சர் துரைமுருகனும், “நகைச்சுவையை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் நண்பர்களாகவே இருப்போம்” என்று பேசினார்.

Advertisment

இந்நிலையில் இவர்கள் இருவரின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம் கொடுத்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற வைரமுத்து இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “இரண்டு நகைச்சுவைகள் நேற்று முட்டிக்கொண்டன. ஒருபக்கம் ஆருயிர் கலைச் சகோதரர் ரஜினி, மறுபக்கம் என் ஆருயிர் அரசியல் தலைவர் துரைமுருகன். இவர்கள் இரண்டு பேருக்கு மத்தியில் அகப்பட்டு நசுங்கிவிட்டேன். ரஜினி ஒரு நகைச்சுவை சொன்னார், துரைமுருகன் ஒரு நகைச்சுவை சொன்னார். நேற்று அந்த நகைச்சுவைகள் மிகவும் சோகமாகப் பேசப்பட்டு, இன்று காலை முதல் இதுதான் நகைச்சுவை என்று உச்சத்திற்கு வந்துவிட்டது. இன்றைக்கு துரைமுருகன் ஒரே வார்த்தையில் விஷயத்தை முடித்துவிட்டார்” என்றார்.

மேலும் கவிதை நடையில் இரண்டு வாக்கியத்தை கூறி விவரித்தார். அதில், “உங்கள் பகை கல்லில் வீழ்ந்த பிளவா? தங்கத்தில் வீழ்ந்த பிளவா? இது மிகவும் அழகான கேள்வி. கல்லில் விழுந்த பிளவை ஒட்ட வைக்க முடியாது. ஆனால் தங்கத்தில் சிறு கீறல் விழுந்தால் கூட நெருப்பு காட்டினால் ஒட்டிவிடும். இரண்டு தங்கங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்பதுதான் இந்த பிரச்சனைக்குத் தீர்வு. பெரியவர்களின் நட்பு தண்ணீரில் அம்பு கிழித்தது போன்றது. அம்பு கிழித்த தடம் நீரோட்டத்தில் எப்படி காணாமல் போகுமோ அதுபோல இந்த வம்பு கிழித்த தடமும் நேற்றோடு போய்விட்டது” என்றார்.

:Durai Murugan Actor Rajinikanth Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe