Advertisment

தொன்மத்துக்கு ஒரு நீதி தொன்மைக்கு ஒரு நீதியா? - கேள்விகளை அடுக்கிய வைரமுத்து

vairamuthu about keezhadi issue

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் 2 கட்டங்களாக அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து இந்த அகழாய்வு பணியை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே அவர் மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு தொடர்பான 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையில் சமர்பித்தார். ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு அமர்நாத் ராமகிருஷ்ணனமே திருப்பியனுப்பப்பட்டது. இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இதையடுத்து வேறொரு தொல்லியல் ஆய்வாளரின் கீழ் அடுத்த கட்ட அகழாய்வை இந்திய தொல்லியல் துறை நடத்தியது. ஒரு கட்டத்தில் அதுவும் நின்றுவிட்டது. இதையடுத்து தமிழக அரசின் சார்பில் அடுத்தக் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி தொடங்கியது. 4ஆம் கட்டம் முதல் தொடங்கிய இந்த ஆராய்ச்சி தற்போது 10ஆம் கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழக அரசு இதுவரை நடத்திய அகழாய்வு ஆராய்ச்சி குறித்த முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் முதல் மற்றும் 2ஆம் கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து முதல் 2 கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யுமாறு இந்தியத் தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இதற்கு, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது, ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்திருந்தார். போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என்று தமிழக அரசு குற்றம்சாட்டியது.

Advertisment

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன; அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் கஜேந்திர சிங் ஷெகாவத் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்லித் தமிழர் பெருமைகளைத் தள்ளி வைக்கிறார். ஒரு தமிழ்க் குடிமகனாக அமைச்சருக்கு எங்கள் அறிவின் வலியைப் புலப்படுத்துகிறேன்.

vairamuthu about keezhadi issue

கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் இந்தியச் சோதனைச் சாலையில் முடிவு செய்யப்பட்டவை அல்ல; அமெரிக்காவில் ஃபுளோரிடாவின் நடுநிலையான சோதனைச் சாலையில் சோதித்து முடிவறியப்பட்டவை. அதனினும் சிறந்த அறிவியல் தரவு என்று அமைச்சர் எதனைக் கருதுகிறார்? சில தரவுகள் அறிவியலின்பாற் பட்டவை; சில தரவுகள் நம்பிக்கையின்பாற் பட்டவை. ராமர் என்பது ஒரு தொன்மம் அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை; நம்பிக்கையே அடிப்படை. கீழடியின் தொன்மை என்பதற்கு அறிவியலே அடிப்படை. ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? தொன்மத்துக்கு ஒரு நீதி தொன்மைக்கு ஒரு நீதியா? தமிழர்களின் நெஞ்சம் கொதிநிலையில் இருக்கிறது.

தமிழ் இனத்தின் தொன்மையை இந்தியாவின் தொன்மையென்று கொண்டாடிக் கொள்வதிலும் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. ‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம் எங்கள் தாய்’ என்ற பாரதியார் பாட்டு எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது. மேலும் பல தரவுகள் சொல்வதற்கு உள்ளன விரிக்கின் பெருகுமென்று அஞ்சி விடுக்கிறோம். அங்கீகார அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Keezhadi Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe