நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறியும் மயக்கமடைந்தும் 41 பேர் இறந்தனர். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அரசு தரப்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதையடுத்து விஜய் வீடியோ வெளியிட்டார். அதில் முதல்வரைக் குறிப்பிட்டு பழிவாங்க வேண்டும் என்றால் என்னை பழிவாங்கிக்கொள்ளுங்கள் என் தொண்டர்களை ஒன்றும் செய்யாதீர்கள் என விமர்சித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையானது. விஜய்க்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த் மற்றும் சிடி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன் ஜாமீன் கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடர்பட்ட வழக்கில் த.வெ.க-வினரையும் காவல் துறையையும் அரசையும் சென்னை உயர்நீதி மன்றம் கண்டித்து சராமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. இதனிடையே தவெக-வின் மற்றொரு நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மீது சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு பின்பு நீக்கியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர். அவரையும் நீதிமன்றம் சராமாரியாக கேள்வி எழுப்பியது.
கரூர் துயர சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த அது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து, “கரூர்த் துயரத்தின் இறுக்கத்திலிருந்து
தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும். ஊடகங்களும் சமூக உரையாடல்களும் அந்த மனத்தடையிலிருந்து வெளியேற வேண்டும். அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும். 41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான். இந்தக் கருப்புத் துயரத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய யாரும் ஒரு தனி அறையில் தம் மனச்சான்றோடு உரையாடித் தாமே தம்மிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
ஒரு செய்தி என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு வேலையும் இன்றி
27ஆயிரம்பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால் அவர்களின் வாழ்வியல் என்ன?
அவர்களால் இழக்கப்படும் மனிதவளம் என்ன? கல்வி நிறைந்த சமூகம் என்கிறோமே இவர்களுக்குக் கல்வி என்ன செய்தது? வெறும் எழுத்தறிவா கல்வி? காலத்தின் அருமையை வாழ்வின் பெருமையைக் கற்றுத் தருவதல்லவா கல்வி. அந்த 27 ஆயிரம் பேர் இன்னும் கலைந்துவிடவில்லை. நாடெங்கும் அந்த மக்களைக்
கணக்கெடுக்க வேண்டும் தொழில் கொடுத்து அவர்களுக்கு நேரமில்லாமல் செய்ய வேண்டும். நாளாகலாம்... ஆனால், அதை நோக்கிச் சமூகம் நடந்தே தீர வேண்டும்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.