/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_191.jpg)
சட்டப் பேரவையில் நேற்று பள்ளிகல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்ற போது பல்வேறு கட்சிகள் இணைந்து, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்” அமைக்க வேண்டும் என கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இது குறித்து பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து பேசினார்கள். இதையடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது நீண்டநாள் கனவு என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் காணவேண்டும் என்பது நீண்டநாள் கண்டுவந்த நெடுங்கனவு காணவேண்டும் என்பது நீண்டநாள் கண்டுவந்த நெடுங்கனவு.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திற்குக் கலைஞர் பெயரைச் சூட்டுவதில் சட்ட சாத்தியங்கள் குறைவு என்றறிந்து வாடிப்போனேன். இப்போது கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசே பல்கலைக்கழகம் அமைக்கவிருக்கிறது என்ற அறிவிப்பில் உச்சி குளிர்ந்தது: உள்ளம் மலர்ந்தது. தமிழ்நாட்டில் உயர் கல்விக்குத் தங்க மகுடம் சூட்டிய தலைவன் பெயரால் பல்கலைக்கழகம் அமைவது நாட்டுக்கு உழைத்தவர்க்கு நாம்காட்டும் நன்றியாகும்.
முதலமைச்சர் இந்தப்பணியை ஆற்றுவது தந்தைக்கு மகன்செய்யும் நன்றியல்ல; தமிழுக்குத் தொண்டன்செய்யும் கடமையாகும். கலைஞர் பல்கலைக்கழகம் உலகத் தரத்தில் உருவாகட்டும் அந்த ஆலமரத்தில் ஆயிரம் பறவைகள் கூடு கட்டட்டும் தமிழன் அறிவு உலக ஞானமாய் உயரட்டும். இதுதான் கலைஞருக்குக் கட்டப்படும் மெய்யான அறிவாலயம். கலைஞர் மீது காதல் கொண்டவர்கள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி. அந்தப் பல்கலைக்கழகத்தின் சுவர்களைத் தொட்டுப் பார்க்க என் பத்து விரல்களும் இப்போதிருந்தே படபடக்கின்றன. சீக்கிரம் கட்டுங்கள்; சிகரம் எட்டுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)