சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13ஆம் தேதி தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் 50 மருத்துவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆளுநர் ரவி நினைவுக் கேடயம் வழங்கியிருந்தார்.
அந்த கேடயங்களில் 'செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு' என்று அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு கீழ் 'குறள் வரிசை எண் 944' என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி ஒடு திருக்குறளே இல்லை எனது இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த ஆளுநர் மாளிகை, அந்த கேடயங்களை திரும்பப்பெற திட்டமிட்டிருப்பதாகவும், திருக்குறளை திருத்தம் செய்து மீண்டும் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. போலி திருக்குறள் இடம்பெற்றிருந்த இந்த விவகாரம் தமிழறிஞர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாகியுள்ளது. அவர்கள் தங்களது வருத்தங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து, எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் எனக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஜூலை 13இல் ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதே நாளில் ஆளுநர் மாளிகையில் ஒரு விழா நடந்ததாய்க் கேள்விப்பட்டேன். மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் 944ஆம் திருக்குறள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகத்தில் இல்லாத குறளை யாரோ எழுதியிருக்கிறார்கள். அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு. யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார்.
இது எங்ஙனம் நிகழ்ந்தது? ராஜ்பவனில் ஒரு திருவள்ளுவர் தங்கியுள்ளார் போலும். அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக்கொள்ளுங்கள். எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.