பாஜகவின் மூத்த நிர்வாகியும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இல.கணேசன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் தி,நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, இல.கணேசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இல. கணேசனுடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “தமிழ்நாட்டிற்கு பெருமை தந்த அரசியல் தலைவர்களுள் அவரும் ஒருவர். ஒரு ஆளுநராக மட்டுமல்லாமல், நல்ல மனிதராக, இலக்கியவாதியாக மாற்றுக் கட்சியினரையும் மதிக்கிற பண்பாளராக திகழ்ந்தவர். அவரிடம் நிகழ்காலம் கற்றுக்கொள்வதற்கு ஒன்று உண்டு. எவரையும் புண்படுத்தலாகாது, எந்த நிலையிலும் வெறுப்பு அரசியல் கூடாது என்ற ஒரு லட்சியத்தை மனதுக்குள் ஊன்றி, வாழ்ந்தவர். எனக்கும் அவருக்கும் உள்ள பழக்கம், இலக்கியம் குறித்தது. பொற்றாமரை என்ற ஒரு அமைப்பை அவர் நிறுவியிருந்தார். அதன் வழியே அவர் இலக்கியம் வளர்த்தார். நல்ல ரசிகராகவும் பேச்சாளராகவும் இருந்தவர்.
நாகாலாந்து வாருங்கள், இயற்கையைக் கண்டு காணாத கவிதையெல்லாம் எழுதலாம், என்று என்னை அழைத்தவர். அவருடைய அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய பெருமைகளுள் ஒன்று, அவர் எல்லாரையும் மதித்தவர் என்று. எந்த உயர்ந்த நிலைக்கு சென்றாலும், சமூகத்தை மதித்தல் என்பதில் அவர் எப்போதும் முன்னிலையில் இருந்தார். அதில் அவருக்கு பெருமை உண்டு. அவருடைய பெயருக்கு கீழே அவரது தியாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அவருடைய நீண்ட கால வாழ்வியலில் அவர் தன்னலமற்றவராக இருந்தார் என்பது மிகப் பெரிய குறிப்பு. எனக்கு தெரிந்து, நேர்மையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் என்பது தான், அவருடைய மிகப் பெரிய சிறப்பு. அவருக்கு, போய் வாருங்கள் நல்லவரே... தாமரை மட்டுமல்ல சூரியனும் துக்கம் கேட்கும் என நான் எழுதியிருக்கிறேன். அதையே என் இரங்கல் செய்தியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்றுள்ளார்.