Skip to main content

“பாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர்” - வைரமுத்து  

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vairamuthu about bharathidasan

பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனிடையே பாரதிதாசன் குறித்த நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழக சார்பில் மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்” என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, “பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர். காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது இருபெருங் கவிஞர்களையும் மீண்டும் தேசிய திராவிடக் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டுகிறேன். இருவரும் கட்சி கடந்தவர்கள்; தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள். பாவேந்தர் பிறந்தநாளில் இந்த இலக்கியக் கோணல் நிமிர்ந்து நேராகட்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சார்ந்த செய்திகள்