சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் ரஜினி, நக்மா, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாட்ஷா’. பாலகுமரன் வசனம் எழுதியிருந்த நிலையில் தேவா இசை மற்றும் பாடல்களை கவனித்திருந்தார். ரஜினியின் ஸ்டைலிஷ் மற்றும் எளிமையான இரு கதாபாத்திரங்களின் நடிப்பு, ரகுவரனின் மிரட்டலான வில்லத்தனம், நக்மாவின் அழகு, தேவாவின் துள்ளல் கலந்த பாடல்களும் தெறிக்கவிடும் பின்னணி இசையும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது.

ரசிகர்களின் பேராதரவைப் பெற்று, தமிழ் சினிமாவின் மாஸ் படங்களில் முக்கிய படமாக இப்படம் இருந்து வருகிறது. இன்றளவும் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டால், ரசித்து பார்க்கும் ரசிகர் கூட்டம் இருந்து வருறது. இப்படம் வெளியாகி 30 வருடங்களை கடந்துள்ள கடந்த 18ஆம் தேதி 4கே மற்றும் டால்மி அட்மாஸ் ஒப்பிபதிவுடன் ரீ ரிலீஸானது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ், திரைத்துறையில் 60 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக இந்த ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 

ரீ ரீலிஸ் தொடர்பாக பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி நடிப்பு குறித்து பாட்ஷாவாக நடிக்கவில்லை பாட்ஷாவாகவே மாறினார் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர் வைரமுத்து தனது அனுபவங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில், “பாட்ஷா படத்தின் மறு வெளியீடு சில தகவல்களைப் பரிமாறுமாறு கூறுகிறது. ‘எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோ’ என்ற பாட்டு அவசரம் கருதி எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது.
‘தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு’ என்ற பாட்டு ஆண் குரலுக்காக மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு ஜேசுதாசால் பாடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அதில் ‘ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக’ என்ற வரியை‘ரண்டு’ புறம் என்று பாடியிருக்கிறார் பாடகர். நான் எவ்வளவோ முயன்றும்
அதை மீண்டும் திருத்த இயலவில்லை. 

அமெரிக்காவில் இருந்து வைரமுத்து வரட்டும் என்று பாராட்டு விழாவைத் தள்ளி வைத்திருந்தார் ரஜினி. எம்.ஜி.ஆரின் உச்சம் நாடோடி மன்னன், ரஜினியின் உச்சம் பாட்ஷா. இந்த இரண்டு வெற்றிப் படங்களிலும்
சம்பந்தப்பட்டவர் ஆர்.எம்.வீ என்று பாராட்டினேன். ‘இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’
என்ற சர்ச்சைப் பேச்சுப் பேசப்பட்டதும் அங்கேதான். ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும்
அதைத் தொடர்ந்துதான். தமிழ்நாட்டின் கலை அரசியலோடு கலந்துபோன படம் பாட்ஷா. அதில் எனக்குப் பிடித்தது சண்டைக்குத் தயாராகும்முன் ரஜினி சொல்லும் வசனம் ‘உள்ளே போ’. இப்போது பார்த்தாலும்
நரம்பு முறுக்கேறி இரும்பாகிவிடுகிறது. இதை ரஜினியிடமே சொல்லியிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.