vairamuthu about baasha movie experience

திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, அவரது வாழ்வில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளையும் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் பாட்ஷா படத்தில் பணியாற்றியபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான வைரமுத்துவின் எக்ஸ் பதிவில், “பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்’ என்று கேட்டார். அதற்கு நான் ‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ வாங்குகிறேன் என்றேன். இதை கேட்டு அவர் அதிர்ச்சியாகி நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார். அதன் பின்பு அவர், ‘பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்று கூறினார். இப்போது நான்வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் முடிவு என்றேன். அவரும் ‘பாடல் எழுதுங்கள் பார்க்கலாம்’ என்றார். எல்லாப் பாடலும் எழுதி முடித்தவுடன் நான் கேட்டதில் 5ஆயிரம் குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார். நான் பேசாமல் பெற்றுக்கொண்டேன். அதன் பிறகு பாட்ஷா வெளியாகி வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது.

அதன் பிறகு ஒரு நாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன் அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது. காரிலிருந்து இறங்கி வந்தவர், ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீரப்பன் உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார். அங்கு சென்றதும் என் கையில் ஒரு உறை தந்தார். பெற்றுக்கொண்டு ‘என்ன இது?’ என்றேன். அதற்கு அவர், ‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார். நன்றி சொல்லி பெற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று கருதிக்கொண்டு அந்தப் பணம் 5ஆயிரத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக வழங்கினேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாட்ஷா படம் 1995ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisment