தமிழ் சினிமாவில் இனிமேல் அவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை என்ற அளவிற்கு எல்லா விதமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் வடிவேலு. குறிப்பாக தனது பாடி லேங்குவேஜால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கமெடியில் கோலோச்சியவர். இதனிடையே குணச்சித்திர நடிகராகவும் பாடகராகவும் வலம் வந்திருக்கிறார். சமீப காலமாக ஹீரோவாகவும் களம் கண்டார். 

Advertisment

2023ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்து ஒரு புது டைமன்ஷனை இன்ரைய கால இளைஞர்களுக்கு காண்பித்தார். கடைசியாக ‘மாரீசன்’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இது எல்லாம் போக மீம்ஸ் என்ற கலாச்சாரத்திற்கே முழு வடிவமாக இவர் திகழ்கிறார். இன்றளவும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வடிவேலு இன்று தனது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “எல்லாருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் இருக்குற ரசிகர்கள், என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்குறீங்க. உங்களுடைய வாழ்த்து என் குலதெய்வத்தை விட அதிகமான வாழ்த்தா இருக்கு. மக்கள் தான் எனக்கு கடவுள். அவங்க தான் எனக்கு தெய்வம். நீங்க இல்லைன்னா நான் இல்ல. இன்னைக்கு இந்தளவுக்கு நான் உங்க முன்னாடி நிக்கிறேன்னா அதுக்கு காரணம் நீங்க தான். அதுமட்டுமில்லாம இன்னைக்கும் சினிமாவில் நான் ஜொலிக்க காரணம் உங்க ஆசீர்வாதம் தான். உங்க வாழ்த்து இன்னைக்கு மட்டுமில்ல, என்னைக்குமே வேணும்” என நெகிழ்ச்சியடைந்தார்.