தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், செயலாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மறைந்த நடிகர்கள் டெல்லி கணேஷ், ராஜேஷ், மனோஜ் கே பாரதி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சரோஜா தேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்பு நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அடுத்து தேசிய விருது வாங்கவுள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு அறிக்கைக்கு ஒப்புதல், சங்கம் மற்றும் சங்க உறுப்பினர் குறித்து தவறாகவும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதுாறாகவும் தகவல்களை பதிவிடும் சங்க உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், உறுப்பினர் அல்லாதவர் மீது புகார் அளிக்கலாம், சங்க புதிய கட்டிடத்துக்காக ரூ.10 கோடி கடன் பெற ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட திர்மானங்கள் அடங்கும்.
இதனிடையே வடிவேலு ஒரு கோரிக்கை வைத்தார். அவர் பேசுகையில், “ஒரு சிலர் அவங்களுடைய படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக மற்ற படங்களுக்கு காசு கொடுத்து நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள்.10 பேர் சேர்ந்து சினிமாவை அழித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அவதூறு பரப்புவோரை தூங்க விடாமல் நடிகர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும். சினிமாவில் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பார்க்காமல் நடிகர்களை தவறாக பேசி வரும் யூட்யூபர்ஸ்களுக்கு சங்கம் கடுமையான நடவடிக்கை எடுகக் வேண்டும். முதல் நாளே ரசிகர்களிடம் ஊடகங்கள் விமர்சனம் எடுப்பதை தடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்த போது நிர்வாகிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், “இந்த வீடியோவை பார்ப்பவர் தான் மீண்டும் அதே போல் அடுத்த வீடியோவை போடுவார். அவரை திருத்தவே முடியாது. திருந்தவும் மாட்டார். ஏனென்றால் எங்களை வைத்து அவர் சம்பாதிக்கிறார். நாங்கள் சட்ட ரீதியாகத்தான் எதாவது பண்ண முடியும். ஆனால் அவரை திருத்த முடியாது” என்றார்.