Vadivelu Singamuthu case Court issues order

வடிவேலு, சிங்கமுத்து இருவரும் இணைந்து முன்பு பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மனதைக் கவர்ந்திழுத்தார்கள். இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டின்காரணங்களால் இருவரும் ஒன்றாகத் திரையில் தோன்றுவதில்லை . முன்னதாக இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் நிலையில், வடிவேலு கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னை பற்றி சிங்கமுத்து யூடியூப்-ல் தரக்குறைவாகப் பேசியதால் ரூ.5 கோடியை நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறு பரப்பத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Advertisment

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதன் பின்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திரைத்துறை சார்ந்த கருத்து மட்டுமே தெரிவித்ததாக சிங்கமுத்து பதிலளித்திருந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வடிவேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தொடர்ந்து சிங்கமுத்து வடிவேலு பற்றி அவதூறு பேசிவருவதாக” குற்றம் சாட்டினார். அதற்கு சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்திருந்தார். இவ்விரு தரப்பினர் வாதங்களை விசாரித்த நீதிபதி, சிங்கமுத்து இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே வடிவேலு பற்றிப் பேசியிருந்த வீடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதோடு விசாரணையை வருகிற டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.