‘24ம் புலிகேசி’ பட சர்ச்சை பூதாகரமானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு தயாராகிவரும் வடிவேலு, அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார். இந்த ஐந்து படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, இப்படத்திற்கு 'நாய் சேகர்' எனப் பெயரிட உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில், காமெடி நடிகர் சதீஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு அதே பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து, இப்படத்திற்கு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.