தினசரி சமூக வலைதளங்களில் மீம்கள் உலா வந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டின் சோசியல் மீடியாவில் 75 சதவீதம் கண்டிப்பாக வைகைப்புயல் வடிவேலு செய்த காமெடி கலாட்டாக்களை வைத்துதான் இருக்கும். திரையில் நம்மை சிரிக்க வைத்தவர், தற்போது மீம்களாக தினம் தினம் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக 2008ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்துக்கும் இவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்யும்போது விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தார். அதற்கு முன்பு வரை ரசிகர்களுக்குப் பொதுவாகத் தெரிந்த வடிவேலு இப்படி செய்து வருகிறாரே என்று பொது மக்கள் மத்தியில் இவர் மேல் இருந்த பிம்பம் மாறியது. இதற்கிடையில் 2010 ஆம் ஆண்டில் தன்னுடன் நடித்து வந்த சக நடிகரும் வடிவேலுவின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டவருமான சிங்கமுத்து தன்னிடம் பணமோசடி செய்துவிட்டார் என்று கூறி மேலும் ஒரு சர்ச்சையை தொடக்கிவைத்தார்.

2011 தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றிபெற்றது. அதனை அடுத்து வடிவேலு நடித்த படங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இந்த அரசியல் பிரச்சாரங்களுக்கு வருவதற்கு முன்பு ஹீரோவாக நடித்த படமும் சரிவர ஓடவில்லை. வடிவேலுவின் காமெடிகள் மட்டும் தினசரி டிவிகளில் வர, அவர் வெளியுலகிற்கு வருவதை குறைத்தார். பொது நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சி என்று எதிலும் கலந்துகொள்ளாதவராக இருந்தார். இந்த காலகட்டத்தில்தான் வடிவேலுவின் பெரும்பாலான திரைப்பட காட்சிகள் மீம்களாக சமூக வலைதளங்களில் உலா வரத்தொடங்கின.
2015ஆம் ஆண்டில் திடீரென வடிவேலு ஹீரோவாக நடித்த 'எலி' படம் வெளியானது. அந்த ஆண்டில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு ஆதரவு அளித்தார். அவர்களுக்காக சில நிகழ்ச்சிகளிலும் கூட கலந்துகொண்டார். மீண்டும் திரையுலகில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்த்தனர். அதேபோல அடுத்த ஆண்டில் விஷால் நடிப்பில் வெளியான 'கத்திச்சண்ட' படத்தில் காமெடியானாக நடித்தார். 2017ஆம் ஆண்டில் சிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் காமெடியனாக நடித்தார். ஆனால், இவரது அரசியல் பிரச்சாரத்திற்குப் பிறகு இவர் நடித்த எந்த பாத்திரங்களும் மக்களை ஈர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ரசிகர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்து வந்த இவர் பல சர்ச்சைகளில் மாட்டி ஸ்ட்ரெஸ் ஆனார். பெர்சனலாக இவர் நடத்திய வேறு தொழில்களிலும் இழப்பு என்றெல்லாம் பல செய்திகள் வந்தன. அப்போது, வடிவேலு நடிப்பில் மெகா ஹிட்டான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் அடுத்த பாகத்தை 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி'யாக எடுக்கத் தயாரானார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். பலரும் இந்த படத்தை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வடிவேலுவின் சர்ச்சை திசை அப்போதும் மாறவில்லை. ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தரும் சம்பளம் கேட்டதாக ஒரு செய்தி வந்தது, அதன் பின் பட ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை போன்ற பல காரணங்களை சுட்டிக்காட்டி தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் வைக்கப்பட்டது. வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுத்துவிட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் கூட வந்தது. இப்படி வடிவேலு குறித்து நேர்மறையான செய்திகள் வந்து பல ஆண்டுகளாகிவிட்டன. அவரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை, பெரும்பாலும் தன் மதுரை வீட்டிலேயே தங்கியிருந்தார். இவ்வளவு ஏன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது மகளுக்கு திருமணம் வைத்திருந்தார். திருமண விழாவையும் பெரிய ஆரவாரமும் இல்லாமல் நெருங்கிய உறவினர்களை வைத்தே சிம்பிளாக முடித்துகொண்டார். திமுகவின் பூச்சி முருகன் மட்டுமே இதில் கலந்து கொண்ட பிரபலம்.
இப்படி வெளியே அதிகம் தலை காட்டாமல் இருந்த வடிவேலு, நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்த, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பெரிய விழாவில், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் வைகைப் புயல் வடிவேலு. தற்போது அவர் அந்த விழாவில் கலந்துகொண்டதை வைத்து கூட மீம்ஸ் போடத் தொடங்கிவிட்டார்கள். இப்போது எப்படி இருந்தாலும் அப்போது வடிவேலு செய்த காமெடியால் எப்போதும் ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.