உலகளவில் கரோனா பாதிப்பு நான்கு லட்சத்திற்கும் மேலாகியுள்ளது. அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். உலகம் எங்கும் இதைத் தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 719 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு மக்களிடம் கண்ணீர் மல்க பேசி அறிவுரை கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், "மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்றேன். தயவு பண்ணி எல்லாரும் அரசாங்கம் சொல்ற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள். மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கிறது. தன் உயிரைப் பணயம் வைத்து பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காவல்துறையினர் நம்மைக் காவல் காத்து ”பாதுகாப்பாக இருங்கள், தயவு பண்ணி வெளியே வராதீர்கள்” என்று கூப்பிடும் அளவுக்கு இருக்கிறது. யாருக்காகவோ இல்லையோ நம்ம சந்ததியினருக்காக, நம்ம வம்சாவளிக்காக, நம்ம உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். தயவு பண்ணி யாரும் வெளியே போகாதீர்கள். அசால்ட்டாக இருக்காதீர்கள். ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. தயவு பண்ணி வெளியே வராதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.