Skip to main content

இது பிக்பாஸ் இல்ல... ஆனால் இங்கும் 100 நாள் சவால்தான்!... வடிவரசு-ஷ்ரவன் கலை செய்த 100 நாள் சாதனை

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

vadivarasu pradeepan

 

ஏறக்குறைய ஓராண்டாக உலகின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் ஆசையோடு அனைவரும் உள்ள நிலையில், மீண்டும் 'உருமாறிய கரோனா' குறித்த செய்திகள் மெல்லிய பயத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. அந்த அளவுக்கு இருந்தது லாக்-டவுன் காலம். அதே நேரத்தில் இந்த ஒருவருட காலம் பலரது வாழ்க்கையிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குள் இருந்த திறமையை அடையாளம் காணுவதற்கும், அடையாளம் கண்ட திறமைகளைப் பட்டைத் தீட்ட போதிய நேரம் வாய்க்காதவர்களுக்கும் இக்காலம் சரியான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில், இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்களுள் ஒருவராக நமக்குத் தென்பட்டார் எழுத்தாளரும் பாடலாசிரியருமான வடிவரசு பிரதீபன்.

 

'100 நாட்கள்... தினமும் 100 நொடியில் ஒரு பாடல்' என்ற அசாத்திய முயற்சியைக் கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ள வடிவரசுவிடம் பேசினோம். வணக்கம் சொல்லி நம்மை வரவேற்ற வடிவரசு பிரதீபன், பேசத் தொடங்கினார்.

 

உங்களைப் பற்றி?

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவடத்தனூர் என்ற சிறிய கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. சென்னை லயோலா கல்லூரியில் எம்.எஸ்.சி. கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றேன். அதன்பிறகு, மாணவப் பத்திரிகையாளராகச் செயல்பட்டு வந்தேன். அதில் என்னுடைய பங்களிப்பிற்காக அந்த ஆண்டிற்கான (2011-12) சிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது கிடைத்தது. அதன்பிறகு பத்திரிகையாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். பாடலாசிரியராக, எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. ஒரு கட்டத்தில் நாம் அதற்குத் தயாராகிவிட்டோம் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. உடனே வேலையைவிட்டு வெளியேறி தற்போது முழுநேர எழுத்தாளராகச் செயல்பட்டு வருகிறேன்.

 

எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?

 

2018-ஆம் ஆண்டு என்னுடைய அப்பா 94 வயதை எட்டினார். இத்தனையாண்டு காலமாக நமக்காக உழைத்த அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அது அவர் கனவில் கூட நினைத்துப் பார்க்காததாக  இருக்க வேண்டும் என முடிவெடுத்து, விமானத்தில் அவரைச் சென்னை அழைத்து வந்தேன். அந்த அனுபவத்தை என்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவாக எழுதினேன். அதைப் படித்த பலரும் பாராட்டியதோடு மட்டுமில்லாமல் 'இது ஃபேஸ்புக் பதிவிற்கானது அல்ல... பத்திரிகைக்கு அனுப்புங்கள்' என உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அது ஒரு பத்திரிகையில் வெளியானது. அதற்குக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் தனிப்பட்ட முறையில் வந்த கடிதங்கள்தான் தொடர்ந்து என்னை எழுத வைத்தன.

 

நூறு நாள், நூறு பாடல் என்ற முயற்சி கேட்பதற்கே வித்தியாசமாக உள்ளதே?

 

நானும் எனது நண்பரும் இசையமைப்பாளருமான ஷ்ரவன் கலையும் இதை 2014-ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டடோம். பல காரணங்களால் அது தள்ளிப் போனது. இந்த முறை நிச்சயமாக ஆரம்பிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் முடிவெடுத்தோம். நினைத்தபடியே நூறு நாட்களைத் தற்போது வெற்றிகரமாக எட்டிவிட்டோம். புது வருடம் 2021-ஐ நூறு பாடல்களோடு வரவேற்ற மாதிரியான உணர்வு ஏற்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் ஒரு பாடல் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

 

பாடல்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

 

லட்சக்கணக்கில் கேட்கப்படாவிட்டாலும் கணிசமான நபர்கள் தொடர்ந்து கேட்டு ரசித்தனர். கேட்ட அனைவருமே வெகுவாகப் பாராட்டினார்கள். இவ்வளவு மெனக்கெடலுடன் எப்படி தொடர்ந்து திட்டமிடுகிறீர்கள் எனப் பலரும் ஆச்சரியமடைந்தனர்.

 

நூறு நாட்களில் என்றாவது அயர்ச்சியாக உணர்ந்தீர்களா?

 

வரவேற்பு குறைவாக இருக்கும்போது அவ்வப்போது அது தோன்றும். நாம் எதை நோக்கி உழைக்கிறோம் என்பதை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டால் அந்த அயர்ச்சியெல்லாம் மறைந்துபோகும். இது மாதிரியான ஒரு முயற்சி செய்கிறோம் என்பதை மட்டுமே அனைவரிடமும் தெரியப்படுத்தினோம். விருப்பப்பட்டால் அவர்கள் தேடிப்போய் பார்த்து ரசிக்கட்டும். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுப்பி, அவர்கள் கேட்காததால் ஏற்படும் சோர்வுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தோம்.

 

எழுத்தாளராக நீங்கள் நெகிழ்ச்சியாக உணர்ந்த தருணம்?

 

என் அப்பாவின் 94-ஆவது பிறந்தநாளுக்குப் பிறகே எழுத ஆரம்பித்ததாக முன்னர் கூறினேன். அவருடைய அடுத்த பிறந்தநாள் வருவதற்குள் எழுத்தாளராக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். 'ஐயா எனும் 95 வயது குழந்தை' என்ற நூலை எழுதி அவருடைய 95-ஆவது பிறந்தநாளுக்குப் பரிசாக அளித்தேன். இது எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் நெகிழ்வான தருணம்.

 

இலக்கியம், சினிமா இரண்டிலும் யாரை உங்களது முன்னோடியாக கருதுகிறீர்கள்?

 

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயாதான் எனது குரு. தற்போது நான் எழுதிவரும் 'நிலைத்திணை' புத்தகத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தும் மிகவும் பிடித்தமானது. சினிமாவைப் பொறுத்தவரை கண்ணதாசன், வைரமுத்து, நா.முத்துக்குமார், தாமரை என அனைவரது பாடல்களையும் கேட்பேன். 

 

சினிமாவில் உங்களது எழுத்து?

 

சில சிறிய படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளேன். ஒரு பெரிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

 

இலக்கியம் மற்றும் திரை என இரண்டிலும் தன்னுடைய எழுத்தால் வடிவரசு பிரதீபன் கோலோச்ச நக்கீரன் சார்பாக அவரை வாழ்த்துவோம்.

 

சார்ந்த செய்திகள்