தனுஷ் இயக்கத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இவருடன் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தினை ரெட் ஜெயண்ட் பேனரில் இன்பன் உதயநிதி தமிழகத்தில் வெளியிடுகிறார். 

Advertisment

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசும் போது வட சென்னை 2 படம் குறித்து பேசினார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வட சென்னை 2 படம் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘வட சென்னை’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒரு கல்ட் கிளாசிக் படமாக இருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் ‘வட சென்னை 2 - அன்புவின் எழுச்சி’ என்ற தலைப்பில் உருவாகுவதாக பார்ட் 1-பட இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷின் வேறு சில கமிட்மெண்டுகளால் தள்ளி போனது. பின்பு வெற்றிமாறன் திடீரென சிம்புவுடன் படம் பண்ணுவதாக கமிட்டான நிலையில் அது வட சென்னை 2-வாக இருக்கலாம் என்ற செய்திகள் வெளியானது. 

மேலும் தனுஷ், வட சென்னை பட உரிமையை வெற்றிமாறனுக்கு தரவில்லை என்றும் ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் தனுஷ் தர மறுக்கவில்லை என்றும் சிம்பு படம் வட சென்னை இரண்டாம் பாகம் அல்லாது, அப்பட உலகை மையப்படுத்தி உருவாகிறது என்றும் வெற்றிமாறன் விளக்கம் அளித்தார். சிம்பு முடிந்த பின்பு வாடிவாசல் முடித்துவிட்டு வட சென்னை 2 தனுஷை வைத்து ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை வட சென்னை 2 குறித்து இவைதான் அப்டேட்டாக இருக்கும் பட்சத்தில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இப்படம் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது, ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.