தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய் கட்சியின் முதல் மாநாட்டை கடந்த மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார். அதில் கட்சியின் அரசியல் எதிரி கொள்கை எதிரி என அனைத்தையும் கூறி தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் விஜய், முன்னதாக 2026 சட்டமன்ற தேர்தல் தான் நமக்கு இலக்கு என தெரிவித்தது போல், அதை நோக்கியும் பயணம் செய்து வருகிறார். அதோடு 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நோக்கி செயல் பட்டு வரும் த.வெ.க. தற்போது 1 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் பொறுப்பாளர்கள் மூலம் நேரடியாகவும் பலர் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர். இந்த நிலையில் வாழை படம் மூலம் கவனம் ஈர்த்த பொன்வேல், தற்போது த.வெ.க-வில் இணைந்துள்ளார். வாழை படத்தில் சிவணைந்தான் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தூத்துக்குடியில் த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்தார்.