ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வானரன்’. பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு தந்தை மகள் உறவை சொல்லும் கதையாகவும் இப்படம் உருவாகியுள்ளது.  

பகல் வேஷம் கலையில் ஆஞ்சநேயர் வேடம் அணிந்து காணிக்கை பெற்று வாழ்ந்து வருகிறார் பிஜேஷ் நாகேஷ். அவரது மகளாக வரும் பேபி வர்ஷினிக்கு மூளையில் கட்டி ஏற்பட, அதை சரி செய்ய ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது. இதனால் மகளைக் காப்பாற்ற போராடும் பிஜேஷ் நாகேஷ், அதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறார், இறுதியில் மகளை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை. 

பகல் வேஷம் போடும் கலைஞர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை அப்படியே கண்முன் வந்திருக்கும் பிஜேஷ் நாகேஷ், முதல் படத்திலே கைதட்டல் பெறுகிறார். அவரது மகளாக வரும் பேபி வர்ஷினி, தனக்கு கொடுத்த ஸ்பேசில் கச்சிதமாக பொருந்தி கவனம் பெறுகிறார். நாயகியாக வரும் அக்‌ஷயா வழக்கமாக வரும் நாயகி போல் வந்து செல்கிறார். மற்றபடி உடன் நடித்த  லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர்,
ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல்  பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன் மற்றும் மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர். 

நிரன் சந்தர் ஒளிப்பதிவில் எமோஷ்னல் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பை அப்படியே ஆடியன்ஸுக்கு கடத்திவிடுகிறார். ஷாஜகான் இசை, படத்திற்கு பக்கபலம். ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், கனம் நிறைந்த படமாக கொடுத்து கவனம் பெற்றிருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.